அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவைச் சிறப்பாகச் செய்ய உத்தரபிரதேச அரசு பல்வேறு ஏற்பாடுகளைச் செய்துவருகிறது.
புதுச்சேரி: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் மிகப்பிரமாண்டமான முறையில், கலை நுட்பத்துடன் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இதற்காக ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து கற்கள் கொண்டு வரப்பட்டு, அதன் மூலம் 350 தூண்கள் செய்யப்பட்டுள்ளன. இந்தத் தூண்கள்மூலம் கருவறை அமைக்கப்பட்டுள்ளது.
ராமர், சீதா தேவி, லட்சுமணன் சன்னதி உள்பட 44 நுழைவு வாயிலுக்கு, 44 கதவுகள் மாமல்லபுரம் சிற்பக்கூடத்தில் பயின்ற சிற்பிகளால் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்புகள் வாய்ந்த அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் பால ராமர் சிலை பிரதிஷ்டை ஆகியவை வருகிற 22-ந்தேதி நடைபெறவுள்ளது. கும்பாபிஷேக விழாவை, உலகமே வியக்கும் வண்ணம் நடத்துவதற்கு உத்தரபிரதேச அரசு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துவருகிறது. கும்பாபிஷேகத்துக்கான சிறப்புப் பூஜைகள் கடந்த 16-ந் தேதி தொடங்கின.
இந்த நிலையில், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வருகிற 22-ம் தேதி புதுச்சேரி மாநிலத்திற்கு பொது விடுமுறை விடப்படுவதாக அம்மாநில முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். ஏற்கனவே மத்திய அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள், வங்கிகளுக்கு, அன்றைய தினம் அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

