விரைவில் உயர்கிறது ஆட்டோ கட்டணம்!

Advertisements

சென்னை:

சென்னையில் ஓடும் ஆட்டோக்களுக்கு முதல் 1.8 கிலோ மீட்டர் தூரத்திற்கான ஆட்டோ கட்டணம் 25 ரூபாய் என்றும் அடுத்த ஒவ்வொரு கி.மீட்டருக்கும் தலா 12 ரூபாய், காத்திருப்பு கட்டணம் 5 நிமிடத்துக்கு ரூ.3.50 என 2013-ம் ஆண்டுக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.

இரவு நேரத்தில் இந்தக் கட்டணத்தை இரட்டிப்பாக வசூலிக்க அனுமதிக்கப்பட்டது.

ஆனாலும் இதில் பல ஆட்டோ டிரைவர்களுக்கு உடன்பாடு இல்லை என்பதால் மீட்டர் போடாமல் குத்து மதிப்பாகப் பணம் கேட்கும் நடைமுறை சென்னையில் பரவலாகி விட்டது.

ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், கோவில்கள் கடை வீதிகள் என எல்லா பகுதிகளிலும் ஸ்டாண்டு ஆட்டோக்களை அழைத்தால் அவர்கள் ஒரு தொகை கேட்பார்கள். நாம் ஒரு தொகை சொல்ல வேண்டும். இதற்கு மத்தியில் பேரம் பேசிதான் ஆட்டோவில் பயணிக்க முடியும். எந்த ஆட்டோவிலும் மீட்டர் போடுவது கிடையாது.

ஓலா, ஊபர் ஆட்டோக்களில் கூடக் காண்பிக்கும் தொகையைவிட 20 ரூபாய், 30 ரூபாய் அதிகம் தாருங்கள் எனக் கேட்கும் வழக்கம் உருவாகிவிட்டது.

இதனால் பல இடங்களில் ஆட்டோ டிரைவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. இதில் பாதிக்கப்படும் பயணிகள் அரசுக்குப் புகார்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தப் புகார் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவதால் இதற்கு முடிவு காண அரசு தற்போது முயற்சி எடுத்து வருகிறது.

இந்த நிலையில் தமிழ் நாட்டில் ஓலா, ஊபர் செயலிக்கு மாற்றாக அரசு ஒரு புதிய செயலியை உருவாக்க வேண்டும் என ஆட்டோ ஓட்டுனர்கள் சார்பில் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதை நிறைவேற்றும் வகையில் தமிழக போக்குவரத்து துறையின் சார்பில் ஸ்டார்ட் அப்மற்றும் தனியார் நிறுவனத்துடன் இணைந்து செயலி உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக முதல் கட்டமாகக் கிண்டியில் உள்ள தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவன பயிற்சி மையத்தில் ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் போக்குவரத்து துணை ஆணையர் தலைமையில் நடைபெற்றது.

ஆட்டோக்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட பழைய கட்டணத்திற்கு பதிலாகக் குறைந்தபட்ச கட்டணமாக ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.50-ம், அதற்கு மேல் கிலோ மீட்டருக்கு ரூ.25-ம் நிர்ணயம் செய்ய வேண்டும் என ஆட்டோ தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தியதாகத் தெரிகிறது.

இதுகுறித்து போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறும்போது, ஆட்டோக்களுக்கு டிஜிட்டல் மீட்டருக்குப் பதிலாகப் பிரத்யேக செயலி கொண்டு வர உள்ளோம். அதற்காக இதுவரை 1.70 லட்சம் தொழிலாளர்களின் விவரங்களைச் சேகரித்துள்ளோம்.

புதிய கட்டண விவரத்தை அரசுக்குப் பரிந்துரைத் துள்ளோம். அது பரிசீலனையில் இருக்கிறது. விரைவில் ஆட்டோ கட்டணத்தை அரசு அறிவிக்கும் என்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *