Ashok Nagar: மது போதையில் தகராறு.. அரிவாளை தூக்கிய வாலிபர்!

Advertisements

சென்னை: அசோக் நகரில் போதை ஆசாமிக்கும் ஆம்னி பேருந்து டிரைவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. போதை ஆசாமியை பொதுமக்கள் கண் முன் அரிவாளால் வெட்ட டிரைவர் பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை கோயம்பேட்டில் இருந்து மதுரை நோக்கி கடந்த 20ம் தேதி ஆம்னி பேருந்து புறப்பட்டது. அசோக் நகர் 11வது அவென்யூ பகுதியில் பயணிகளை ஏற்ற டிரைவர் ஆம்னி பேருந்தை சாலையோரம் நிறுத்த முயன்றார். அப்போது பைக்கில் மது போதையில் வந்த ஆசாமி ஒருவர் பஸ்சின் குறுக்கே வந்தார். இதை கவனித்த பேருந்து டிரைவர் வாகனத்தை பிரேக் பிடித்து நிறுத்தினார். இதனால் பைக்கில் வந்த போதை ஆசாமிக்கும், ஆம்னி பேருந்து டிரைவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் போதை ஆசாமி, ஆம்னி பேருந்து டிரைவரின் தாயை ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆம்னி பேருந்து டிரைவர், பாதுகாப்புக்கு வாகனத்தில் வைத்திருந்த அரிவாளை எடுத்துக்கொண்டு போதை ஆசாமியை வெட்ட முயன்றார். இதை பார்த்த பொதுமக்கள் இருவரையும் சமாதானம் செய்தனர். மேலும், பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் சிலர், தங்களது செல்போனில் தகராறை வீடியோ எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

இதுகுறித்து சென்னை மாநகர காவல்துறையின் கவனத்திற்கு வந்தது. உடனே குமரன் நகர் போலீசார் தகராறு செய்த போதை ஆசாமி மற்றும் ஆம்னி பேருந்து டிரைவர் குறித்து விசாரணை நடத்தினர். அதில், போரூர் அன்னை சத்யா நகரை சேர்ந்த பாபு (39) என்பவர், மது போதையில் பைக்கை ஓட்டிவந்து தகராறில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும், அரிவாளால் வெட்ட முயன்ற டிரைவர் மதுரையை சேர்ந்த பெரியய்யன் (38) என தெரியவந்தது. இவர், கடந்த 2 ஆண்டுகளாக கோயம்பேடு முதல் மதுரை வரை ஆம்னி பேருந்து ஓட்டி வருகிறார். அதைதொடர்ந்து மது போதையில் தகராறு செய்த பாபு, நேற்று முன்தினம் இரவு குமரன் நகர் காவல் நிலையத்தில் தன்னை அரிவாளால் வெட்ட முயன்றதாக ஆம்னி பேருந்து டிரைவர் மீது புகார் அளித்தார். புகாரின்படி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *