Arvind Kejriwal Arrest: கெஜ்ரிவால் கைது.. “மோடியின் மரண ஜனநாயகம்” என எதிர் கட்சிகள் கடும் தாக்கு!

Advertisements

புதுடெல்லி: டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் “மோடியின் மரண ஜனநாயகம்” எனத் தாக்குதல் தொடுத்தனர். தேர்தல் ஆணையத்தில் நேரில் சென்று முறையிடவும் முடிவு செய்யப்பட்டது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு முறையான அறிவிப்பு ஆணை வெளியிட்டபின்பு டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தது நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

பயந்தாங்கொள்ளி சர்வாதிகாரியின்மரண ஜனநாயகம்:

காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சித் தலைவர்கள் இந்த நடவடிக்கையைக் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது சமூக வலைதள பக்கத்தில், மோடி அரசின் இந்த நடவடிக்கையை, “பயந்தாங்கொள்ளி சர்வாதிகாரி ஒருவர், ‘மரண ஜனநாயக’த்தை உருவாக்க முயற்சிக்கிறார்” எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அமைச்சர் ஒருவரை கைது செய்வது என்பது மிகச் சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருக்கிறார்.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், “அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக எந்த நிலைக்கும் பாரதிய ஜனதா கீழிறங்கி செல்லும் என்பதை இந்தக் கைது நடவடிக்கை காட்டுவதாக, தாக்குதல் தொடுத்தார்.

மக்கள் புரட்சிக்கு..

சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கெஜ்ரிவால் கைது நடவடிக்கை மக்களிடையே புதிய புரட்சியை உருவாக்கும் என்றார்.

“மீண்டும் ஆட்சிக்கு வரமாட்டோம் என்பதை தெளிவாகப் புரிந்து கொண்ட பாரதிய ஜனதா அந்தப் பயம் காரணமாக எதிர்க்கட்சித் தலைவர்களைப் பொது வாழ்விலிருந்து அகற்ற நினைக்கிறது” என்றும் அவர் சாடினார்.

கேரள முதல்வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பினராயி விஜயன் “தேர்தல் சமயத்தில் எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்குவதற்கான பாரதிய ஜனதாவின் சதி என்பதை இந்த நடவடிக்கை தெளிவாக உணர்த்துகிறது” எனக் கூறியிருக்கிறார்.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்” அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு ஜனநாயக மாண்புகளை அழித்து வரும் எந்த ஒரு பாரதிய ஜனதா தலைவர்மீதும் இது போன்ற கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை” எனக் குற்றம் சாட்டினார்.

தேர்தல் ஆணையத்தில் முறையீடு:

திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்காள முதல் வருமான மம்தா பானர்ஜி கெஜ்ரிவால் கைதுக்குக் கடும் கண்டனம் தெரிவித்தார். கெஜ்ரிவாலின் மனைவி சுனிதாவிடம் டெலிபோனில் தொடர்பு கொண்டு தனது அசைக்க முடியாத ஆதரவையும் ஒற்றுமையும் தெரிவித்ததாகக் கூறினார்.

இந்தியா கூட்டணி தலைவர்கள் இன்று தேர்தல் ஆணையத்தில் நேரில் சென்று இதுகுறித்து தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து முறையீடு செய்ய இருப்பதாகவும் அவர் கூறினார்.

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், “கெஜ்ரிவால் ஒரு தனி நபர் அல்ல; அவர் ஒரு சிந்தனை, கொள்கை; பாறையைப் போல் அவருக்கு ஆதரவாக நாங்கள் நிற்போம். புரட்சி ஓங்குக” எனக் கூறி இருக்கிறார்.

கடந்த ஜனவரி மாதத்தில் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதையும் எதிர்க்கட்சித் தலைவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *