Arulmigu Maasani Amman Temple Festival: எலும்பை வாயில் கவ்வியபடி மயான பூஜை கோலாகலம்!

Advertisements

பிரசித்தி பெற்ற மாசாணியம்மன்கோவிலில் குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.மயான பூஜையையொட்டி அங்கு ஆனைமலை போலீஸ் துணை சூப்பிரண்டு ஸ்ரீநிதி உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி: கோவை மாவட்டம் ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான குண்டம் திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து தினமும் மாசாணியம்மன் கோவிலில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மயான பூஜை நிகழ்ச்சி நேற்று நள்ளிரவு நடந்தது.

இதனையொட்டி கோவிலில் நள்ளிரவில் மாசாணியம்மனுக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது. பூஜைகள் முடிந்ததும் அருளாளி அருண், தலைமை முறைதாரர் மனோகரன் உள்பட 20-க்கும் மேற்பட்ட அருளாளிகள் ஆழியாற்றங்கரையில் உள்ள மயானத்திற்கு அம்மனின் சூலம் தாங்கிச் சென்றனர்.

அங்கு மயான மண்ணை கொண்டு மாசாணியம்மன் திருவுருவம் உருவாக்கப் பட்டிருந்து. நள்ளிரவு 1 மணிக்குப் பம்பை இசை முழங்க மயான பூஜை தொடங்கியது.

அப்போது அம்மன் அருளாளி அருண் சாமி வந்து ஆடியபடி, அம்மன் உருவத்தைச் சிதைத்து எலும்பை வாயில் கவ்வியபடியே பிடி மண்ணை எடுத்தார். அங்குத் திரண்டிருந்த பக்தர்கள் மாசாணி தாயேயெனப் பக்தி கோஷம் எழுப்பினர்.

இந்தப் பூஜையில் ஆனைமலை, பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்தவர்கள், வெளிமாவட்டத்தினர், வெளி மாநிலத்தினர் பலரும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக ஸ்ரீ மாசாணி அம்மன் நற்பணி மன்றம் சார்பில் வள்ளி கும்மியாட்டமும் நடைபெற்றது. இதனையும் பக்தர்கள் கண்டு ரசித்தனர்.

மயான பூஜையையொட்டி அங்கு ஆனைமலை போலீஸ் துணை சூப்பிரண்டு ஸ்ரீநிதி உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இன்று காலை 9.30 மணிக்குச் சக்தி கும்பஸ்தாபனம், மாலை 6.30 மணிக்கு மகா பூஜை நடந்தது. நாளை (சனிக்கிழமை) காலை 7.30 மணிக்கு ஆனைமலை குண்டம் மைதானத்தில் குண்டம் கட்டுதல் நடக்கிறது.

அதனைத் தொடர்ந்து மாலை 6.30 மணிக்குச் சித்திரைத் தேர் வடம்பிடித்தல், அம்மன் திருவீதி உலா ஆகியவையும் நடக்கிறது. இரவு 10 மணிக்குக் குண்டம் பூ வளர்க்கப்படுகிறது.

25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.30 மணி முதல் 7.30 மணிக்குள் திரளான பக்தர்கள் குண்டம் இறங்குகிறார்கள். 26-ந்தேதி காலை 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் கொடி இறக்குதல், காலை 10 மணிக்கு மஞ்சள் நீராடுதலும், இரவு 8 மணிக்கு மகா முனி பூஜையும், 27-ந்தேதி காலை 11.30 மணிக்கு மகாஅபிஷேகம் மற்றும் அலங்கார பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *