
திருச்சியில் ராகிங்கில் ஈடுபட்ட சட்ட பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நடப்பு கல்வியாண்டில் 10வது செமஸ்டரில் படிக்க ஓராண்டு தடை விதிக்க ராகிங் தடுப்புக் குழு பரிந்துரை செய்துள்ளது.
திருச்சி தமிழ்நாடு தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் 600 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு இறுதியாண்டு பயிலும் 2 மாணவர்கள், கடந்த 13ம்தேதி சக மாணவர் ஒருவருக்கு குளிர்பானத்தில் சிறுநீரை கலந்து குடிக்க வைத்துள்ளனர். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர், சட்ட பல்கலைக்கழக துணைவேந்தர் நாகராஜிடம் புகார் செய்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க, 3 பேராசிரியர்கள் அடங்கிய குழுவினருக்கு துணைவேந்தர் உத்தரவிட்டார். இதனையடுத்து இந்த குழுவினர், பாதிக்கப்பட்ட மற்றும் குற்றம் சாட்டப்பட்ட மாணவர்கள் மற்றும் 7 பேரிடம் விசாரணை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்ட 2 மாணவர்களையும் சஸ்பெண்ட் செய்து துணைவேந்தர் நாகராஜ் உத்தரவிட்டார்.இந்நிலையில் திருச்சி சட்டப் பல்கலைக்கழக மாணவர்கள் 2 பேருக்கு நடப்பாண்டு செமஸ்டர் தேர்வு எழுதத் தடை விதிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர் தலைமையில் 9 பேர் கொண்ட ராகிங் தடுப்பு குழுவினர் பங்கேற்ற கூட்டம் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் ராகிங் புகாரில் தொடர்புடைய 2 மாணவர்களுக்கும் நடப்பு கல்வி ஆண்டில் (2023-2024) 10-வது செமஸ்டர் தேர்வுக்கு படிக்கவும், தேர்வு எழுதவும் தடை விதிப்பதும் , இந்த செமஸ்டர் படிப்பை அடுத்த கல்வியாண்டில் (2024-2025) படிக்கலாம் எனவும் முடிவு செய்தது. இந்த பரிந்துரையை பல்கலைக்கழக நிர்வாக குழு அடுத்த வாரம் இறுதி செய்யும் என பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

