
நெட்ஃப்ளிக்ஸ் தளத்திலிருந்து அன்னபூரணி திரைப்படம் நீக்கப்பட்டுள்ளது.
நடிகை நயன்தாரா நடித்துள்ள ‘அன்னபூரணி’ திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வசூல்ரீதியாகச் சுமாரான வரவேற்பைப் பெற்ற இப்படம், நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் கடந்த டிச.29ஆம் தேதி வெளியானது.
இந்நிலையில் அன்னபூரணி திரைப்படம் ஆண்டி இந்துத் திரைப்படம் என்றும் லவ், ஜிஹாத் பிரச்னையை இத்திரைப்படம் ஊக்குவிப்பதாகவும், இப்படத்தின் மீதும் நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் ஜீ ஃபைவ் நிறுவனங்களின் மீதும் மும்பை காவல்துறையிடம் முன்னாள் ஷிவசேனா தலைவர் ரமேஷ் சொலான்கி புகாரளித்திருந்தார்.
இந்நிலையில், நெட்ஃப்ளிஸ் தளத்திலிருந்து அன்னபூரணி திரைப்படம் நீக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தச் சர்ச்சைகுறித்து விஸ்வ இந்து பரிஷத் அமைப்புக்கு ஜீ நிறுவனம் சார்பில் பகிரப்பட்டுள்ள அறிக்கையில், மேற்குறிப்பிட்ட காட்சிகளை மறு படத்தொகுப்பு செய்வது தாங்கள் இணை தயாரிப்பு நிறுவனமான ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்துடன் பேசி வருவதாகவும், அதுவரை நெட்ஃப்ளிக்ஸ் தளத்திலிருந்து அன்னபூரணி படத்தினை நீக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் முன்னதாகத் தெரிவித்திருந்தது.
மேலும், இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளர்களாகத் தங்களுக்கு இந்து மதத்தினர் மற்றும் பிராமண சமுதாயத்தின் உணர்வுகளைக் காயப்படுத்தும் வகையில் எந்த நோக்கமும் இல்லை என்றும், அப்படி ஏதேனும் அவர்களது உணர்வுகளைப் புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


