Annamalai vs Tamilisai: அண்ணாமலை நீக்கமா? அறிக்கை கேட்கும் பாஜக மேலிடம்!

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மிகப்பெரிய தோல்வி அடைந்துள்ள நிலையில், மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராகக் குரல் எழுந்துள்ளது. அந்த வகையில் முன்னாள் மாநில தலைவர் தமிழிசைக்கும், அண்ணாமலைக்கும் இடையே உட்கட்சி மோதல் தொடங்கியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள பாஜக மேலிடம் விளக்க அறிக்கை கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பாஜகவிற்கு அதிர்ச்சி கொடுத்த தமிழகம்

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று முடிவடைந்துள்ளது. 400 தொகுதிகளில் வெற்றிபெற்று தனித்து ஆட்சி அமைப்போம் எனப் பாஜக கூறி வந்த நிலையில், பொரும்பான்மைக்கு தேவையான இடங்களைக் கூடப் பெற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது. இதனால் கூட்டணி கட்சிகளின் உதவியோடு ஆட்சி அமைத்தது பாஜக. குறிப்பாக நாட்டில் பல்வேறு மாநிலங்களில் பரவலாக இடங்களைப் பிடித்த பாஜகவிற்கு, தமிழகத்தில் ஒரு தொகுதி கூடக் கிடைக்காமல் சென்றது பாஜக தலைமை அதிர்ச்சி அடைய செய்தது.

அதிமுகவுடன் கூட்டணி தொடர்ந்திருந்தால் குறைந்த பட்சம் 10 முதல் 15 தொகுதிகளையாவது கைப்பற்றியிருக்க முடியும். ஆனால் அண்ணாமலையின் தவறான முடிவால் அதிமுகவுடன் கூட்டணி முறிவு ஏற்பட்டதால் தோல்வியும் கிடைத்து பல தொகுதிகளில் டெபாசிட் கூட வாங்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டதாகப் பாஜகவின் மூத்த நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.

இருந்த போதும் தோல்வி அடைந்தாலும் பாஜகவின் வாக்கு சதவிகிதம் அதிகரித்துள்ளதாக அண்ணாமலை ஆதரவாளர்கள் ஒரு பக்கம் கூறி வருகின்றனர். ஆனால் இந்தப் பேச்சைப் பாஜக தேசிய தலைமை ரசிக்கவில்லையெனக் கூறப்படுகிறது. இதனாலேயே அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பொறுப்பு வழங்கப்படவில்லையெனத் தெரிகிறது.

அண்ணாமலை- தமிழிசை மோதல்

இந்தச் சூழ்நிலையில் பாஜக முன்னாள் தலைவரும், இரண்டு மாநில ஆளுநராக இருந்த தமிழிசை மீண்டும் அரசியல் களத்திற்கு வந்துள்ளார். இதனால் பாஜகவில் யார் பெரியவர் என்ற போட்டி தொடங்கியுள்ளது. குறிப்பாகத் தமிழிசை பல இடங்களில் செய்தியாளர்களைச் சந்தித்து கருத்து கூறுவதை அண்ணாமலைக்கு பிடிக்கவில்லை.

இதனால் பாஜகவினர் எங்கும் பேட்டி கொடுக்கக் கூடாது எனக் கட்டளையிட்டுள்ளார். பாஜக தலைமை அலுவலகத்தில் மட்டுமே பேட்டி கொடுக்கப்படும் எனக் கூறியுள்ளார். இது தமிழிசைக்கு வைக்கப்பட்ட செக் என அண்ணாமலை ஆதரவாளர்கள் சமூக வலைதளத்தில் பரப்பி வருகின்றனர்.

அண்ணாமலை பதவிக்கு ஆபத்தா.?

இந்த மோதல் காரணமாகப் பாஜகவில் இரண்டு மூன்று பிரிவாகப் பாஜக பிரியும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான புகார் டெல்லி மேலிடத்திற்கு சென்ற நிலையில், அண்ணாமலை – தமிழிசை இடையேயான மோதல் தொடர்பாக அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே அண்ணாமலை மீது தமிழக பாஜக மூத்த தலைவர்கள் அதிருப்தியில் உள்ள நிலையில் தற்போது மேலிடம் கேட்டுள்ள அறிக்கையின் காரணமாக அண்ணாமலையின் பதவிக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *