அரசியல் உள்நோக்கத்துடன் அறிக்கை வெளியிட்டுள்ளார் அண்ணாமலை – அமைச்சர் காந்தி!

Advertisements

மாநிலத்தில் பல ஐஏஎஸ் அலுவலர்களுக்குப் பணியிட மாற்றம் வழங்கப்பட்டுள்ள நிலையில், கைத்தறி இயக்குநர் பணியிட மாற்றத்தை மட்டும் திரித்து, அரசியல் உள்நோக்கத்துடன் தமிழக அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை, முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்று தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பதிலளித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று முன்தினம் ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், பொங்கல் தொகுப்பில் வழங்கப்படும் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஊழல் நடைபெறுவதாகக் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில், இதற்குக் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை, தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையின்போது, வேட்டி சேலைகள் வழங்கப்படுகிறது.

அதன் மூலம் நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. இதற்காக, வேட்டி சேலை வழங்கும் திட்டத்தைத் தமிழக அரசு செயல்படுத்துகிறது.

இந்தாண்டுக்கான பொங்கல் திட்டத்துக்கு மொத்தத் தேவையான 1.77 கோடி வேட்டிகள் மற்றும் 1.77 கோடி சேலைகளை உற்பத்தி செய்ய ஆணைகள் வெளியிடப்பட்டன.

இதன்படி, தேவையான சேலைகள் மற்றும் வேட்டிகள் முழுமையாகக் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள்மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.

சங்கங்களுக்கு நூல் ரகங்கள் தரப்பரிசோதனை செய்யப்பட்டு, தேர்வு பெற்ற நூல் மாதிரிகள் அடங்கிய லாட்டுகள் மட்டுமே அனுப்பப்படுகிறது.

உற்பத்தி செய்யப்பட்ட வேட்டி சேலைகள், கோ-ஆப்டெக்ஸ், தமிழ்நாடு கைத்தறி வளர்ச்சி கழகம் மற்றும் தமிழ்நாடு பஞ்சாலை கழகத்தால் 100 சதவீதம் தர ஆய்வு செய்யப்பட்டு, மாவட்டங்களில் உள்ள தமிழக நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளுக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில், கொள்முதல் செய்யப்பட்ட வேட்டி பண்டல்களிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் தரப்பரிசோதனையின்போது, நிர்ணயிக்கப்பட்ட அளவீடுகளைவிட பாலியஸ்டர் சதவீதம் அதிகமாக உள்ளதெனக் கண்டறியப்பட்டது.

சுமார் 13 லட்சம் வேட்டிகள் கொண்ட பண்டல்கள், சம்மந்தப்பட்ட கொள்முதல் முகமை நிறுவனங்களிலேயே நிராகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஆண்டு பொங்கல் 2024 திட்டத்தில் கொள்முதல் செய்யப்பட்ட வேட்டிகளை தரப்பரிசோதனை செய்ததில், 100 சதவீதம் காட்டன் பாவு நூல் பயன்படுத்தப்பட்டுள்ளதாகப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, கடந்தாண்டு பொங்கல் வேட்டி தொடர்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ள புகார்களுக்கு எந்தவித முகாந்திரமும் இல்லையென நிரூபணமாகியுள்ளது.

தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளுக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டதில், கைத்தறி இயக்குநரின் பணியிட மாற்றமும் ஒன்றாகும்.

இதில், கைத்தறி இயக்குநர் பணியிட மாற்றத்தை மட்டும் திரித்து, அரசியல் உள்நோக்கத்துடன் தமிழக அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை, முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதாகும்.

இவ்வாறு, அரசியல் ஆதாயத்துக்காகக் கண்ணியமற்ற முறையில் செய்திகளை வெளியிடுவது, மாநில அளவில் பொறுப்பில் உள்ள அரசியல் கட்சித் தலைவருக்கு உகந்ததல்ல.

திமுக அரசின் மீது, வீண் பழி சுமத்தி, களங்கம் ஏற்படுத்தப் பகல் கனவு காணும் எண்ணம், எந்நாளும் நிறைவேறாது. இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *