கோவை காந்திபுரத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள ‘பெரியார் அறிவுலகம்’ நூலகத்திற்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் மிகப்பெரிய முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகப் பிரபல எழுத்தாளரும், நூல் தேர்வுக்குழு உறுப்பினருமான பெருமாள் முருகன் வெளியிட்ட தகவல் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
போலியான பதிப்பக முகவரிகள், செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட தரமற்ற உள்ளடக்கங்கள், தவறான ISBN எண்கள் மற்றும் ‘திரிஷா விஜய்’, ‘விஜய் பாலு’ போன்ற எழுத்தாளர்களின் பெயர்களில் போலி புத்தகங்கள் அதிக விலைக்கு வாங்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டது.
இந்தக் குற்றச்சாட்டைக் சுட்டிக்காட்டி தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், “பெரியாரின் கொள்கைகளைப் பேசுவதாகக் கூறிக்கொண்டு ஆட்சியில் இருந்த திமுக, பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றியிருக்கிறது” என்று கடுமையாகச் சாடினார்.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் (நவம்பர் 2025) பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படியே புத்தகப் பரிந்துரைக் குழு அமைக்கப்பட்டு, இத்தகைய தரமற்ற புத்தகங்கள் கொள்முதல் செய்ய பரிந்துரைக்கப்பட்டதாகவும், ஊழலின் ஊற்றுக்கண்ணாக திமுகவே செயல்பட்டுள்ளது என்றும் முதல்வர் குற்றம்சாட்டினார்..
திமுக எழுப்பியுள்ள 5 முக்கிய கேள்விகள்:
முதலமைச்சரின் குற்றச்சாட்டிற்குப் பதிலடி கொடுத்துள்ள திமுக தரப்பு, இந்த விவகாரத்தில் தவெக அரசுக்கு எதிராகப் பின்வரும் 5 முக்கிய கேள்விகளை முன்வைத்துள்ளது..
ஜூன் மாத முத்திரை கேள்வி: பீனிக்ஸ் போன்ற போலி பதிப்பக நூல்களில் ‘ஜூன் 2026’ என்று சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தேதி தவெக முதலமைச்சரின் பிறந்தநாள் மாதம் என்பதால், இது தவெக ஆட்சியில் நடந்த கொள்முதலா?
மார்ச் மாத முத்திரை வேறுபாடு: புகழ்பெற்ற மற்ற பதிப்பக நூல்களில் திமுக ஆட்சிக் காலத்தைக் குறிக்கும் ‘மார்ச் 2026’ முத்திரை மட்டுமே உள்ளது.
கமிஷன் விவகாரம்: போலி பதிப்பக நூல்கள் தவெக ஆட்சிக் காலத்தில் வாங்கப்பட்டிருந்தால், அதற்கான கமிஷன் தொகைகள் யாருக்குச் சென்றன?
தேர்வுக்குழு விழிப்புணர்வு: ‘திரிஷா விஜய்’, ‘விஜய் பாலு’ போன்ற போலி எழுத்தாளர்களின் பெயர்களைப் பார்த்துத் தேர்வுக்குழு உறுப்பினர் பெருமாள் முருகன் அதிர்ச்சியடைந்து புகாரளித்த பிறகே தவெக அரசுக்கு இது தெரிந்ததா?
அவசர அறிக்கை: இந்த அடிப்படை விவரங்கள் எதுவுமே தெரியாமல் தான் முதலமைச்சர் திமுக மீது அவசரப்பட்டு அறிக்கை விட்டாரா?
இந்தச் சர்ச்சை தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து, பள்ளி வழிகாட்டல் மற்றும் நூலகத் துறை சார்பில் உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பெரியார் அறிவுலகத்தில் வைக்கப்பட்டுள்ள சந்தேகத்திற்குரிய போலி புத்தகங்கள் அனைத்தும் அகற்றி சீல் வைக்கப்பட்டு வருகின்றன.

