நீட் முறைகேடு தொடர்பாகக் குழு அமைத்து விசாரிக்கப்படும் என உயர்கல்வித்துறை செயலாளர் சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:நீட் வினாத்தாள் கசிவு மற்றும் மதிப்பெண் குளறுபடி தொடர்பான புகார்கள் எழுந்த நிலையில், டெல்லியில் உயர்கல்வித்துறை செயலாளர் சஞ்சய் மூர்த்தி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பேசியதாவது;
“சுப்ரீம் கோர்ட்டு 2018ல் வெளியிட்ட வழிகாட்டுதல்களின் படியே நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஒரு கேள்விக்குக் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டு உள்ளது. கருணை மதிப்பெண் கொடுத்ததால் மைனஸ் மதிப்பெண் பெற்றவர்களும் முழு மதிப்பெண் கொடுத்துள்ளனர்.
நீட் தேர்வில் எந்தச் சமரசமும் செய்யப்படவில்லை. எங்கும் நீட் வினாத்தாள் கசிவு என்பது நடைபெறவில்லை. தவறான வினாத்தாள் காரணமாக 1,600 பேருக்கு மறு தேர்வு நடத்தப்பட்டுள்ளது. முழு தேர்வு செயல்முறையும் மிகவும் வெளிப்படையானது.
நீட் முறைகேடுகுறித்து விசாரிக்க யுபிஎஸ்சி முன்னாள் தலைவர் தலைமையில் குழு அமைக்கப்படும். தேர்வு மையங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குழு விசாரிக்கும். இந்தக் குழு, ஒரு வாரத்தில் விசாரித்து அறிக்கை வழங்கும். இந்தக் குழு வழங்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.”இவ்வாறு அவர் கூறினார்.

