வங்கி வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு – இன்று வங்கிகள் வழக்கம் போல் இயங்கும்!

வாரத்தில் 5 நாட்கள் வேலை, இரண்டு நாள் விடுமுறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவித்திருந்த 3 நாள் வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் செப்டம்பர் 28 முதல் 30-ம் தேதி வரை நடைபெற இருந்த வேலைநிறுத்தம் தற்போது நடைபெறாது.

இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான யு.எப்.பி.யு. இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே பணிபுரியும் வகையில் அனைத்து சனிக்கிழமைகளையும் விடுமுறையாக அறிவிக்க வேண்டும், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு இடையேயான பாரபட்சமான நடைமுறைகளை மாற்ற வேண்டும், ஐ.டி.பி.ஐ. வங்கியை தனியார்மயமாக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வங்கி ஊழியர் சங்கங்கள் முன்வைத்து வருகின்றன. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 11-ம் தேதி முதல்கட்ட வேலைநிறுத்தமும் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக செப்டம்பர் 28 முதல் 30-ம் தேதி வரை 3 நாட்கள் தொடர் வேலைநிறுத்தம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்திய வங்கிகள் சங்க பிரதிநிதிகளுக்கும், வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்புக்கும் இடையே நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. நீண்ட நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நீடித்த நிலையில், இரு தரப்புக்கும் இடையே சுமுகமான உடன்பாடு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து சனிக்கிழமைகளையும் விடுமுறையாக அறிவிப்பது தொடர்பாக, வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்று ஏற்பாடுகளை ஆராய உயர்மட்டக் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், அதிகாரிகளுக்கான செயல்திறன் ஊக்கத்தொகை திட்டமான பி.எல்.ஐ.யில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மற்ற கோரிக்கைகள் குறித்தும் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்க இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன.

பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவடைந்ததைத் தொடர்ந்து, திட்டமிடப்பட்ட போராட்ட நடவடிக்கைகளையும், 3 நாள் வேலைநிறுத்தத்தையும் ஒத்திவைப்பதாக யு.எப்.பி.யு. அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதனால் செப்டம்பர் 28 முதல் 30-ம் தேதி வரை வங்கி சேவைகள் பாதிக்கப்படும் என்ற நிலை தவிர்க்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 28-ம் தேதி இன்று நாடு முழுவதும் வங்கிகள் வழக்கம்போல் செயல்படும். வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டதால் வங்கி வாடிக்கையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *