Advertisements

இளம் அதிகாரிகள் அனைவரும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உளவுத் தகவல்களை உருவாக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தியுள்ளார்.
தில்லியில் உளவுத்துறையின் இரண்டு நாள் தேசிய பாதுகாப்பு உத்திகள் மாநாட்டின் நிறைவு விழா நடைபெற்றது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசிய போது, தேசிய பாதுகாப்பு உத்திகள் அமைப்பு 15 – 20 ஆண்டுகளுக்குப் பிறகான பாதுகாப்பு சவால்களை முன்கூட்டியே கணித்து, அவை பெரிய அச்சுறுத்தல்களாக மாறுவதை தடுப்பதற்கான உத்திகளை வகுக்க வேண்டும் என்று கூறினார்.
அடுத்த ஓராண்டில் மூன்று புதிய சட்டங்களும் 100 சதவீதம் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தார். இதன் மூலம் குற்றவியல் வழக்குகளை உச்ச நீதிமன்றம் வரையிலான நிலையில் மூன்று ஆண்டுகளுக்குள் முடிக்கவும், தண்டனை விகிதத்தை 25 சதவீதம் அதிகரிக்கவும் முடியும், என்று தெரிவித்தார்.
குற்றங்கள் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் நெட்வொர்க் மற்றும் அமைப்புகள், ஒன்றிணைந்து செயல்படக்கூடிய குற்றவியல் நீதி அமைப்பு மற்றும் தேசிய தானியங்கி கைரேகை அடையாள அமைப்பு ஆகியவற்றின் ஒருங்கிணைந்த தரவுத் தளம் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
எதிர்கால சவால்களை தடுக்கும் வகையில், இளம் அதிகாரிகள் அனைவரும் தரவு ஒருங்கிணைப்பு, பகுப்பாய்வு மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் குற்ற செயல்பாட்டு முறைகளை கண்டறிதல் ஆகியவற்றின் வாயிலாக செயல்படக்கூடிய உளவு தகவல்களை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
Advertisements





