Advertisements

மரிய வில்சனை அமைச்சரவையில் இருந்து முதலமைச்சர் விஜய் நீக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், முந்தைய திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேசுக்கு, லஞ்சம் கொடுத்ததை பகிரங்கமாக சட்டமன்றத்தில் ஒப்புக்கொண்ட தற்போதைய நிதியமைச்சர் மரியவில்சன் மீதும் முன்னாள் கல்வியமைச்சர் மீதும் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
லஞ்சம் கேட்டவர் மீது மரிய வில்சன் அப்போதும் சரி, இப்போதும் சரி எவ்விதப் புகாரும் அளிக்காமல், இந்த விவகாரத்தை சட்டமன்றத்தில் கூறி விளம்பரம் தேடுவதன் அவசியம் என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார். குறுக்கு வழியில் லஞ்சம் கொடுத்து அனுமதி வாங்கும் வகையில் மரிய வில்சனின் கல்வி நிறுவனத்தில் என்ன சட்டரீதியான குறைபாடுகள் உள்ளன? என்று வினவியுள்ளார்.
தனது தனிப்பட்ட நலனுக்காக லஞ்சம் கொடுத்து, தனது காரியத்தை முடித்துக் கொள்ளும் குணநலன் கொண்ட மரிய வில்சனை முக்கிய அமைச்சர் பதவியில் அமர்த்தினால், அரசு இயந்திரம் எப்படி நேர்மையாக இயங்கும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
எனவே, லஞ்சம் வழங்கியதற்காக மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து, சமரசமின்றி முறையாக விசாரிக்க வேண்டும் என்றும், விசாரணை முடியும் வரை, மரிய வில்சனை அமைச்சரவையில் இருந்து முதல்வர் விஜய் நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
Advertisements



