
புதுடெல்லி: தேர்தல் பத்திர விவகாரம் மிரட்டிப் பணம் பறிக்கும் பாஜக அரசின் மோசடியென நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் முதன் முறையாக அதுகுறித்து கருத்து தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருப்பு பணத்தை ஒழிக்கவே தேர்தல் பத்திரங்கள் நடை முறைப் படுத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.
நாடு முழுவதும் கடுமையான விமர்சனம்:
தேர்தல் பத்திர விவகாரம் தேர்தலுக்கு முன்னர் மிகப்பெரிய சலசலப்பையும் பாஜகவுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், தனியார் டிவி கருத்தரங்கில் கலந்து கொண்ட அமித்ஷா, முதன் முறையாகத் தேர்தல் பத்திரங்கள்பற்றித் தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் அமித் ஷா பேசியதாவது: –
“அரசியல் கட்சிகளுக்கான நிதி வழங்கலில் கருப்புப் பணத்தை ஒழிக்கவே தேர்தல் பத்திரங்கள் வாங்கும் முறை நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது.
இப்போது உச்ச நீதிமன்றம் தேர்தல் பத்திரங்களுக்குத் தடை விதித்துள்ளதால் மீண்டும் கருப்புப் பணம் நன்கொடையாக மாறும் வாய்ப்பு உருவாகும். முன்னதாகக் கட்சிகளுக்கான நிதி ரொக்கமாக வழங்கப்பட்டன. ஆனால் தேர்தல் பத்திரங்கள் அமலாக்கப்பட்ட பின்னர் நிறுவனங்களோ, தனி நபர்களோ காசோலையாக மட்டுமே அதனை அளிக்க வேண்டியிருந்தது.
உலகின் மிகப் பெரும்கொள்ளையா?
தேர்தல் பத்திரங்கள்மூலம் பாரதிய ஜனதா கட்சி பெருமளவில் ஆதாயம் பெற்றதுபோல் ஒரு பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்திகூட “தேர்தல் பத்திரங்கள் உலகின் மிகப் பெரிய கொள்ளை” என்றெல்லாம் விமர்சித்துள்ளார். இப்படியெல்லாம் அவருக்கு யார் எழுதிக் கொடுக்கிறார்கள் எனத் தெரியவில்லை.
உண்மையில் பாஜகவுக்கு ரூ.6000 கோடி தான் தேர்தல் பத்திரங்கள்மூலம் கிடைத்துள்ளது. ஆனால் ஒட்டுமொத்தமாகத் தேர்தல் பத்திரங்கள் வாயிலாக அரசியல் கட்சிகளுக்குக் கிடைத்தத் தொகை ரூ.20 ஆயிரம் கோடி. அப்படியென்றால் எஞ்சிய ரூ.14 ஆயிரம் கோடி எங்கே சென்றது. எதிர்க்கட்சிகள் தேர்தல் பத்திரங்கள்மூலம் ஈட்டியுள்ள நிதியானது மக்களவையில் அவர்களின் பிரதிநிதித்துவத்தோடு சற்றும் ஒத்துப்போகவில்லை.
திரிணமூல் காங்கிரஸ் கட்சி ரூ.1600 கோடி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி ரூ.1400 கோடி பெற்றுள்ளது. பிஆர்எஸ் கட்சி ரூ.775 கோடி பெற்றுள்ளது. திமுக ரூ.649 கோடி பெற்றுள்ளது.
தேர்தல் பத்திரங்கள் திட்டம் அமலான பின்னர் கட்சிகளுக்கான நிதியில் ரகசியம் என்பதே இல்லாமல் போனது. காரணம் நிதி வழங்கியவர், நிதி பெறுபவர் இருவரின் வங்கிக் கணக்கில் நன்கொடை விவரம் இடம்பெறுகிறது.
பணமாகத் தேர்தல் நிதி வழங்கப்பட்ட காலத்தில் ரூ.100-ஐ கட்சிக்குக் கொடுத்துவிட்டு ரூ.1000 வீட்டுக்கு எடுத்துச் சென்றனர். காங்கிரஸ் இதைப் பல ஆண்டுகளாகச் செய்துவந்தது”.இவ்வாறு அமைச்ச கூறினார்.

