Amba Prasad: அமலாக்கத்துறை விசாரணைக்கு முன்பு, தானே நடனமாடி ‘புத்தாண்டு வீடியோ’ வெளியிட்ட காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ.!

Advertisements

ராஞ்சி: பணமோசடி வழக்கில் அமலாக் கத்துறையின் விசாரணைக்குச் சற்று முன்னர் தானே ஆடி, பாடி, காங்கிரஸ் பெண் எம்எல்ஏ அம்பா பிரசாத் எடுத்த “புத்தாண்டு வீடியோ” சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கடந்த 2019-ம் ஆண்டு ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற இளம் வேட்பாளர் அம்பா பிரசாத். ஐஏஎஸ் கனவுகளை உதறித் தள்ளிவிட்டு அரசியலுக்கு வந்தவர் இவர்.

பார்காகோ தொகுதியில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ-வாக பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில், மிரட்டி பணம் பறித்தல், மணல் கடத்தல், நிலஅபகரிப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார் அம்பா பிரசாத்.

அவரது வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை கடந்த மாதம் நடத்திய சோதனையில் ரூ. 35 லட்சம் மதிப்பிலான கணக்கில் வராத பணம், டிஜிட்டல் சாதனங்கள், போலி முத்திரைகள், கையால் எழுதப்பட்ட ரசீதுகள் உள்ளிட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இதனிடையில், அம்பா பிரசாதிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று மீண்டும் விசாரணை நடத்தினர்.

அதற்கு செல்வதற்கு சற்று முன்பு ஜார்க்கண்ட் மாநில புத்தாண்டு திருவிழா கொண்டாட்டத்தை ஒட்டி தானே ஆடி, பாடி பதிவு செய்த ’ஜியா ஹர்ஷயே’ என்ற வீடியோ பாடலை அம்பா பிரசாத் வெளியிட்டார்.

அதன் பின் 6 மணிநேர தொடர் விசாரணைக்கு பிறகான செய்தியாளர் சந்திப்பில் 36 வயதான அம்பா பிரசாத் கூறியதாவது:-

“குழந்தை பருவத்திலிருந்தே எனக்கு இசை, நடனம் என்றால் கொள்ளை பிரியம். ஆகவேதான் நமது ஜார்க்கண்ட் மாநிலத்தின் புத்தாண்டைச் சிறப்பாக கொண்டாட சிறிய முயற்சி எடுத்து வீடியோ பாடல் வெளியிட்டேன். ஒரு மணி நேரத்துக்குள் பாடி முடித்துவிட்டேன்.

வீடியோ படம் எடுக்கத்தான் 6 மணி நேரம் ஆனது. இசை மன அழுத்தத்தைக் குறைக்கும் என்பது அறிவியல் உண்மை. மற்றபடி அமலாக்கத் துறை சம்மன், விசாரணை போன்ற சவால்கள் எனக்குப் புதிதல்ல. குழந்தை பருவத்தில் இருந்தே இது போன்ற சவால்களை நான் எதிர்கொண்டு இருக்கிறேன். ஆனால் உண்மை இறுதியில் வெல்லும்”.

இவ்வாறு அவர் கூறினார்.

அம்பா பிரசாத்தின் தந்தையும் முன்னாள் அமைச்சர் ஆன யோகேந்திர சாவ், கடந்த ஏப்ரல் மூன்று மற்றும் நான்கு ஆகிய தேதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு இருந்தார்.
(புத்தாண்டு வீடியோ படத்துடன் அமலாக்கத்துறை சாரணைக்கு அவர் ஆஜரான படமும் இடம்பெற்றுள்ளது.)

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *