அஜித் பவார் மறைவுக்குக் குடியரசுத் தலைவர் , பிரதமர் , உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்.!

மகாராஷ்டிரத் துணை முதலமைச்சர் அஜித் பவார் மறைவுக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள செய்தியில், பாராமதி விமான விபத்தில் அஜித் பவார் இறந்தது துயரமானது என்று குறிப்பிட்டுள்ளர். அவரது அகால மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள செய்தியில், மக்கள் தலைவராக விளங்கிய அஜித் பவார் அடிமட்டத் தொண்டர்களுடனும் தொடர்பு வைத்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். கடினமாக உழைக்கும் அவர் அனைவராலும் மதிக்கப்பட்டவர் என்றும் தெரிவித்துள்ளார். அவரது அகால மரணம் மிகவும் அதிர்ச்சியும் வருத்தமும் அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு வெளியிட்டுள்ள செய்தியில், பாராமதியில் விமானம் நொறுங்கியதில் அஜித் பவார் உயிரிழந்தது அதிர்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அவர் குடும்பத்தினருக்குத் தமது ஆழ்ந்த இரங்கல்கள், என்றும், இந்தத் துன்பக் காலத்தில் அதைத் தாங்கிக் கொள்ளும் வலிமையை இறைவன் அளிக்கட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே இரங்கல் தெரிவித்துள்ளார். பவாரை இழந்துவாடும் குடும்பத்தினரைத் தேற்றுவதற்குச் சொற்கள் இல்லை என்று தெரிவித்துள்ளார். அஜித் பவாரின் மரணம் துரதிர்ஷ்டவசமானது என்றும், அவர் அரசியலில் தனது நெருங்கிய நண்பர் என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

தனது நெருங்கிய நண்பரின் மரணம் வேதனையளிப்பதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவாரின் மரணம் மாநிலத்துக்குப் பேரிழப்பு என்று தெரிவித்தார். தனிப்பட்ட வாழ்விலும் அவர் தனது சிறந்த நண்பர் என்றும், இருவரும் ஒன்றாகப் பல சவால்களை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மகாராஷ்டிரத்தின் வளர்ச்சிக்கு அவர் பெரிதும் பங்களித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மூன்று நாள் அரசுமுறைத் துக்கம் கடைப்பிடிக்க உள்ளதாகக் கூறினார். அஜித் பவாரின் மறைவு தனக்கும் மகாராஷ்டிரத்துக்கும் பேரிழப்பு என்று துணை முதலமைச்சர் ஏக்நாத் சிண்டே தெரிவித்துள்ளார்.

டேராடூனில் உத்தரக்கண்ட் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அஜித் பவார் மறைவுக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் விடுத்துள்ள செய்தியில், அஜித் பவார் விமான விபத்தில் இறந்தது ஆழ்ந்த வேதனையளிப்பதாகத் தெரிவித்துள்ளார். பவார் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *