
திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா எம்ஜிஆர் குறித்து பேசிய கருத்தைத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஏற்றுக் கொள்கிறாரா ? கண்டிக்கிறாரா ? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்,
ஆ ராசா மன்னிப்பு கேட்காவிட்டால் தமிழகம் தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டம் திமுகவிற்கு சவாலாக அமையும் எனத் திருப்பூரில் முன்னாள் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.
திமுக எம்எல்ஏ மகன் வீட்டில் பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், உடனடியாக நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியும் திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக மாநகர மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாநகர மாவட்ட அதிமுகவின் செயலாளரும் முன்னாள் சட்டப்பேரவை துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டிருந்தார். தமிழக அரசுக்கு எதிராகக் கண்டன கோஷங்கள் எழுப்பி அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் சட்டப்பேரவை துணை சபாநாயகரும் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் பட்டியலின பெண் திமுக எம்எல்ஏ மகன் வீட்டில் சித்தரவதைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவமே திராவிட மாடல் ஆட்சிக்கு உதாரணம் எனவும் , இதில் நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் , இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர் அதிமுக மட்டுமல்லாது திமுகவை வளர்த்ததில் முக்கிய பங்காற்றியவர் எம்ஜிஆர் எனவும் , திமுகவில் உள்ளவர்களையும் முதலமைச்சர் ஆக்கியது எம்ஜிஆர் எனக் குறிப்பிட்ட அவர் இதுவரை யாரும் பேசாத அளவிற்கு ஆ ராசா தரக்குறைவாகப் பேசியிருப்பதாகவும் , அவரின் பேச்சைத் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் ஏற்றுக்கொள்கிறாரா ? கண்டிக்கிறாரா ? என்பதை தெளிவுபடுத்த வேண்டும் எனவும் எம்ஜிஆர் குறித்து பேசியதற்காக ஆராசா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் இல்லை என்றால் அதிமுக சார்பில் மிகப் பெரும் போராட்டம் நடைபெறும் எனவும் அது திமுகவிற்கு ஒரு சவாலாக அமையும் எனவும் தெரிவித்தார்.


