
திருவனந்தபுரம்: “ஆதித்யா எல்-1 விண்கலம் இறுதிக்கட்ட பயணத்தில் உள்ளது. வரும் 2024ம் ஆண்டு ஜன.,7ம் தேதி எல்-1 புள்ளியை ஆதித்யா விண்கலம் சென்றடையும்” என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல் தெரிவித்துள்ளார்.
சூரியனை பற்றி விரிவாக ஆய்வு செய்ய, ‘ஆதித்யா எல்1’ விண்கலத்தை, பி.எஸ்.எல்.வி., – சி 57 ராக்கெட் உதவியுடன், இஸ்ரோ கடந்த செப்.,2ல் புவி வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தியது. இந்த விண்கலம் பூமியிலிருந்து, 15 லட்சம் கிலோ மீட்டர் துாரம் உள்ள, ‘லாக்ரேஞ்ச் பாயின்ட் எல்1’ என்ற இடத்தில் நிறுத்தப்பட்டு, அங்கிருந்தபடி சூரியனை ஆய்வு செய்யும்.
இந்தியாவில் விண்வெளி ஆய்வு துவங்கி 60 ஆண்டுகள் நிறைவு அடைந்துள்ளது. இது தொடர்பாகத் திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேசியதாவது: ஆதித்யா எல்-1 விண்கலம் இறுதிக்கட்ட பயணத்தில் உள்ளது. வரும் 2024ம் ஆண்டு ஜன.,7ம் தேதி எல்-1 புள்ளியை ஆதித்யா விண்கலம் சென்றடையும். ஆதித்யா விண்கலம் 125 நாட்களில் 15 லட்சம் கி.மீப்பயணம் செய்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


