Actor Vishal: ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் மீது பரபரப்பு குற்றச்சாட்டு!

Advertisements

ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வருவதோடு, அந்நிறுவனம் செய்யும் உள்ளடி வேலைகளைத் தோலுரித்து பேசியுள்ளார் நடிகர் விஷால்.

தமிழ் திரையுலகில் ஆக்‌ஷன் ஹீரோவாக வலம் வருபவர் விஷால். அவர் நடிப்பில் தற்போது ரத்னம் திரைப்படம் உருவாகி உள்ளது. ஹரி இயக்கியுள்ள இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாகப் பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனி, யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படம் வருகிற ஏப்ரல் 26-ந் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

ரத்னம் படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் அதற்கான புரமோஷன் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ரத்னம் படத்தின் புரமோஷனுக்காக யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த நடிகர் விஷால், ரெட் ஜெயண்ட் மூவீஸ் மீதான தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.

அதில் அவர் பேசியதாவது : “ரெட் ஜெயண்டில் எனக்கு ஒரு நபர்மீது மனஸ்தாபம் உள்ளது. ஒரு படத்தைத் தள்ளிப்போ எனச் சொல்வதற்கு யாருக்குமே அதிகாரம் கிடையாது. யாரும் சினிமாவை சொந்தம் கொண்டாட முடியாது. தமிழ் சினிமா என் கைல இருக்குனு சொல்லி யாரும் உருப்புட்டதா சரித்திரமே கிடையாது.

என் தயாரிப்பாளர் வட்டிகட்டுபவர். சும்மா ஏசி ரூம்ல உட்கார்ந்து கொண்டு, ஒரு போனை போட்டுத் தியேட்டர் போடு, படத்தை ரிலீஸ் பண்ணு, வேற எந்தப் படமும் வரக் கூடாது. அப்படினு சொல்ற தயாரிப்பாளர் கிடையாது. வட்டிக்கு வாங்கி, வேர்வை சிந்தி, நாங்கெல்லாம் ரத்தம் சிந்தி, ஒரு படத்தை எடுத்துக் கொண்டுவந்தா, தள்ளி வாங்கனு நீங்கச் சொன்னா, யாரு உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது.

தமிழ் சினிமாவை நீங்கத் தான் குத்தகைக்கு எடுத்திருக்கீங்களானு அங்குள்ள ஒரு நபர் கிட்ட கேட்டேன். அந்த நபரை உதயநிதியிடம் சேர்ந்துவிட்டதே நான் தான். அவரே இந்தமாதிரி விஷயங்களைப் பண்ணும்போது என்னால் ஜீரனிக்க முடியவில்லை. ஏன்னா என்னோட தயாரிப்பாளர் 65 கோடிவரை செலவு செய்திருந்தார் மார்க் ஆண்டனி படத்திற்கு, அவர் செப்டம்பர் 15-ந் தேதி விநாயகர் சதுர்த்திக்கு ரிலீஸ் பண்ணனும்னு ஒன்றரை மாதத்திற்கு முன்னாடியே முடிவு செய்துவிட்டார்.

என்னுடைய தயாரிப்பாளரை இந்தத் தேதில படத்த ரிலீஸ் பண்ண சொல்றதுக்கு நீங்க யாரு முதல்ல. அவரு காசுக் கடன் வாங்கி படம் பண்ணிருக்காரு, அவரு எப்ப ரிலீஸ் பண்ணுவாருன்னு அவருக்குத் தெரியும். நீங்க மட்டும் ரிலீஸ் பண்ணி, நீங்க மட்டும் தான் சம்பாதிக்கனும்னு எதாச்சும் சட்டம் இருக்கா. ஜாலியா நீ ஏசி ரூம்ல உட்கார்ந்து சம்பாதிக்கிறத நாங்க வேடிக்கை பார்க்கனுமா.

நான் எதிர்த்ததால் தான் படம் சொன்ன டைம்ல ரிலீஸ் ஆகி வெற்றி அடைஞ்சது. அன்னைக்கு நான் சும்மா இருந்திருந்தால் படம் ரிலீஸ் ஆகி இருக்காது. இப்போ ரத்னம் படத்துக்குக் கூடப் பிரச்சனை வரும். கண்டிப்பா வேணும்னே வந்து வேட்டு வைப்பாங்க. இதைச் சொல்ல யாருக்குமே இங்க தைரியம் கிடையாது” என நடிகர் விஷால் அந்தப் பேட்டியில் ஆவேசமாகப் பேசி இருக்கிறார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *