Advertisements

கர்நாடகாவின் கபினி அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீர், இரண்டு நாட்களுக்குப் பிறகு தற்போது தமிழக எல்லைக்குள் வரத் தொடங்கியுள்ளது.
கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பெய்து வரும் பலத்த கனமழையால், கர்நாடகாவில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கர்நாடக அரசு கடந்த 1-ஆம் தேதி இரவு முதல் வினாடிக்கு 5 ஆயிரம் முதல் 25 ஆயிரம் கன அடி வரை உபரி நீரை வெளியேற்றியது. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்ததால், நேற்று முன்தினம் உபரி நீர் திறப்பு வினாடிக்கு 27 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டது.
இந்த உபரி நீர் 2 நாட்களுக்குப் பிறகு தமிழக எல்லையை அடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலை முதலே பிலிகுண்டுலு வழியாகத் தமிழகத்திற்கு வரத் தொடங்கியுள்ளது. நேற்று வரை வினாடிக்கு 500 கன அடியாக இருந்த நீர்வரத்து, தற்போது ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.
இந்நீர்வரத்து மேலும் படிப்படியாக அதிகரிக்கும் என்பதால், இன்று மாலைக்குள் வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து சேரும் என்றும், அதன்பின்னரே காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 15 நாட்களுக்கும் மேலாக ஒகேனக்கல் காவிரி ஆறு தண்ணீரின்றி வறண்டு காணப்பட்ட நிலையில், தற்போது கபினி அணையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள உபரி நீரால் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.
Advertisements




