தமிழக சட்டமன்றத்தில் கார், பைக் உள்ளிட்ட மோட்டார் வாகனங்களில் வரியை உயர்த்தும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நடந்து கொண்டிருக்கும் மழைக்கால கூட்டத்தொடரில் காவிரி நதிநீர் பங்கீடு உள்ளிட்ட அவசரக்கால மசோதக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அனைத்து மோட்டார் வாகனங்களின் வரியை உயர்த்துவதற்கான மசோதா சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாகச் சட்டமன்றத்தில் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், மாநிலத்தின் நிதி வளத்தை உயர்த்துவதற்காக இயக்கூர்திகள் வரி விதிப்பு சட்டத்தில், வரிவிதிப்பு முறைகளில் திருத்தம் கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.
அதன்படி பயணிகள் போக்குவரத்து வாகனங்கள், சரக்கு வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள், வாடகைக்கு இயக்கப்படும் வாகனங்கள், ஆம்னி பேருந்துகள் என அனைத்து வகை வாகனங்களுக்கும், புதிய மற்றும் பழைய இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, கார், கல்வி நிறுவன வாகனங்கள், தனியார் நிறுவன பேருந்துகள் என அனைத்து வகை வாகனங்களுக்கும் புதிய வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.
அதாவது படுக்கையுடன் கூடிய ஆம்னி பேருந்துகளுக்கு ரூ. 4000 வரை வரி உயர்த்தப்பட்டுள்ளது. புதிய இருசக்கர வாகனங்களின் விலை ஒரு லட்சத்துக்கு மேல் இருந்தால் அதன் வாழ்நாள் வரி 12 சதவீதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பழைய இருசக்கர வாகனங்கள் ஓராண்டு பழையதாக இருந்தால் ரூ.1 லட்சம் விலைக்கு 8.25 சதவீதமும், விலை அதற்கு மேல் இருந்தால் 10.25 சதவீதமும் வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதேவே, 2 ஆண்டு பழைய வாகனமாக இருந்தால் 10 சதவீதம் வரை வரி உயர்த்தப்பட்டுள்ளது. புதிய இருசக்கர வாகனங்களுக்கான சாலை பாதுகாப்பு வரி ரூ.375 என்றும், இலரகு வாகனங்களுக்கு ரூ.2,250 என்றும், இதர வாகனங்களுக்கு ரூ.3,000 வரி உயர்த்தப்பட்டுள்ளது.
சரக்கு வாகனங்களில் சரக்குகள் 3000 கிலோவுக்கு ஆண்டுக்கு ரூ.3,600, 3 ஆயிரம் முதல் 5,500 கிலோ எடைகொண்ட வாகனங்களுக்குக் காலாண்டு வரியாக ரூ.1,425 முதல் ரூ.3,100 வரை வரி உயர்த்தப்பட்டுள்ளது. வாடகைக்கு இயக்கப்படும் சுற்றுலா வாகனங்களுக்குக் காலாண்டு வரியாக ரூ.4,900 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பயணிக்கும் கல்வி நிறுவன வாகனங்களுக்கு 7 நாட்களுக்கு ஒரு இருக்கைக்கு ரூ.45 எனக் கட்டண வசூல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் 15 ஆண்டுகள் நிறைவடையாத மோட்டார் சைக்கிள்களுக்கு 5 ஆண்டுகளுக்கான பசுமை வரி ரூ.750 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகனங்களின் மீதான இந்த வரி உயர்வு மசோதாவுக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வ பெருந்தகை எதிர்ப்பு தெரிவித்தார். இதேபோல், பாமக தலைவர் ஜி.கே. மணி, தமிழக் வாழ்வுரிமை கட்சி எம்.எல்.ஏ. வேல்முருகன் உள்ளிட்டோரும் மசோதாவின் திருத்தங்களை மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றனர். இதேபோல் விசிக, மார்க்சிஸ்ட் உள்ளிட்டோரும் வரிவிதிப்பை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தினர்.
எனினும், பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் தான் வாகனங்களில் வாழ்நாள் வரி குறைவு என்றும், தற்போது அதன் வரி 5சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது எனப் போக்குவரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
