POCSO Act: ஆசிரியருக்கு 7 ஆண்டு கடுங்காவல்!

பள்ளியில் செய்முறை தேர்வின்போது பிளஸ் டூ மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஆசிரியருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறையும், 50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே நாதாபுரத்தில் அரசு உதவி பெறும் ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு கணித ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் லாலு (45). இந்தநிலையில் கடந்த பிப்ரவரி மாதம் கோழிக்கோடு அருகே உள்ள வேறு ஒரு பள்ளியில் பிளஸ் டூ செய்முறை தேர்வுக்கு கண்காணிப்பாளராக சென்றார். அப்போது தேர்வு நடந்து கொண்டிருந்தபோது ஒரு மாணவியிடம் லாலு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்.

இது குறித்து மாணவி பள்ளி முதல்வரிடம் புகார் தெரிவித்தார். தொடர்ந்து சோம்பாலா போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் ஆசிரியர் லாலு மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இந்த வழக்கு நாதாபுரம் அதிவிரைவு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுகைப், ஆசிரியர் லாலுவுக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறையும்,50 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *