வான் தாக்குதலில் குடியிருப்பில் இருந்த 15 பேர் பலி!

Advertisements

உக்ரைன் நடத்திய வான் தாக்குதலில் 10 தளங்கள் கொண்ட குடியிருப்புக் கட்டிடம் இடிந்து விழுந்து 15 பேரும், அதன்பின்னர் நடந்த தாக்குதலில் 3 பேரும் இறந்துள்ளனர்.தாக்குதலில் இடிந்து விழுந்த குடியிருப்பிற்கு அருகில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களும் இடிந்து விழும் என்ற அச்சம் ஏற்பட்டது.

மாஸ்கோ:உக்ரைன் மீது ரஷியா மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கை 2 ஆண்டுகளைக் கடந்து நீடிக்கிறது. ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது. அவ்வகையில், நேற்று ரஷியாவின் பெல்கோரட் நகரில் உக்ரைன் நடத்திய வான் தாக்குதலில் 10 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புக் கட்டிடம் இடிந்து விழுந்தது. அந்தக் குடியிருப்பில் வசித்தவர்கள் பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கினர். மீட்புபணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. இன்று காலை நிலவரப்படி 15 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அருகில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களும் இடிந்து விழும் என்ற அச்சம் ஏற்பட்டது. இதனால் அந்தக் குடியிருப்பில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

இதுபற்றிப் பெல்கோரட் பிராந்திய கவர்னர் வியாசெஸ்லவ் கிளாட்கோவ் கூறுகையில், “குடியிருப்பு கட்டிடத்தின் இடிபாடுகளை அகற்றும் முக்கிய பகுதி நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை 15 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. நேற்று மாலை நடந்த தாக்குதலில் பொதுமக்கள் 3 பேர் இறந்தனர். 11-ம் தேதி தாக்குதலின்போது காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் இறந்துள்ளார். இதன்மூலம் உக்ரைனின் தாக்குதலில் அப்பாவி மக்கள் 19 பேரை இழந்திருக்கிறோம்’ என்றார்.

இதற்ககிடையே, உக்ரைனின் வடகிழக்கு கார்கிவ் பகுதியில் உக்ரைன் படைகள் கடினமான சூழ்நிலையை எதிர்கொள்வதாக ராணுவ தளபதி தெரிவித்தார். அங்கு, ரஷியப் படைகள் தொடர்ந்து முன்னேறி வருவதால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதற்கிடையே ரஷியாவின் இடைவிடாத தாக்குதல் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறியிருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் கூறினார்.

கார்கிவ் பகுதியில் பல கிராமங்களைப் பிடித்திருப்பதாக ரஷிய ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால், எதிர் தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் கூறி உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *