10th Class Board Exams: 500 அல்ல 600 மார்க்… 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிரடி மாற்றம்!

அடுத்த கல்வி ஆண்டிலிருந்து தான் இந்தப் புதிய நடைமுறை செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: 10-ம் வகுப்பு மாணவர்களுக்குத் தற்போது வரை 5 பாடங்கள் 500 மதிப்பெண்களுக்குப் பொதுத்தேர்வு நடத்தப்படுகின்றன. தமிழ், ஆங்கிலம், கனிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய 5 பாடங்களுக்குப் பொதுத்தேர்வு நடத்தப்பட்டு தேர்ச்சிக்குரிய மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன.

இந்த நிலையில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தற்போது புதிதாக ஒரு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதாவது, விருப்பப் பாடத்திற்கும் தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயித்துத் தமிழக பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அடுத்து தேர்வு முறையில் பள்ளிக் கல்வித்துறை இந்த மாற்றத்தைச் செய்துள்ளது.

புதிய அறிவிப்பின்படி, தமிழ் அல்லாத சிறுபான்மை மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட மாணவர்கள் இனி விருப்பப் பாடத்திலும் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். விருப்ப பாடங்களை எழுதக்கூடிய மாணவர்களுக்கு மட்டும் 6 பாடங்களுக்குத் தலா 100 மதிப்பெண்கள் என 600 மதிப்பெண்களுக்குத் தேர்வுகள் நடத்தப்படும்.

விருப்பப் பாடத்திற்கான தேர்ச்சி மதிப்பெண் 35 ஆக நிர்ணயித்துப் பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இந்தி, உருது, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட விருப்பப் பாடங்களில் பெறும் மதிப்பெண்களும் இனி சான்றிதழில் அச்சிட்டுத் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு விருப்பப் பாடம் தேர்வு செய்யாத 10-ம் வகுப்பு மாணவர்கள் தற்போதுள்ள வழக்கப்படி 5 பாடங்களில் தேர்ச்சி பெற்றாலே போதும்.

நடப்பு ஆண்டில் பயிலும் மாணவர்களுக்கு இதுவரை உள்ள நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லை. அடுத்த கல்வி ஆண்டிலிருந்து தான் இந்தப் புதிய நடைமுறை செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *