தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு தந்தையர் மகப்பேறு கால விடுப்பு வழங்குவது தொடர்பாக அண்மையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து, ஏற்கெனவே கடந்த 2013-ஆம் ஆண்டிலேயே தந்தையர் மகப்பேறு விடுப்பு தொடர்பாக அரசாணைகள் வெளியிடப்பட்டதாகச் சமூக வலைதளங்களில் சில தகவல்கள் பரவி வந்தன.
இந்தத் தகவல்களின் உண்மைத்தன்மை குறித்து விளக்கம் அளித்துள்ள தமிழ்நாடு அரசின் தகவல் நம்பகத்தன்மைப் பிரிவு, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தந்தையர் மகப்பேறு கால விடுப்புதான் தமிழ்நாட்டில் முதன்முறையாக அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு தந்தையர் மகப்பேறு விடுப்பு தொடர்பாக எந்தவொரு அரசாணையும் வெளியிடப்படவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், கடந்த 2013-ஆம் ஆண்டு பிப்ரவரி 28-ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணை தந்தையர் மகப்பேறு விடுப்பு தொடர்பானது அல்ல என்றும், அது சிறப்பு சேம நலநிதி மற்றும் பணிக்கொடைத் திட்டம் தொடர்பானது என்றும் விளக்கம் அளித்துள்ளது.
அதேபோல், 2013-ஆம் ஆண்டு ஜூன் 7-ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையும் தந்தையர் மகப்பேறு விடுப்புக்கான அரசாணை கிடையாது. அது ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணை என்றும் தகவல் நம்பகத்தன்மைப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
எனவே, 2013-ஆம் ஆண்டிலேயே தமிழ்நாட்டில் தந்தையர் மகப்பேறு விடுப்பு அறிவிக்கப்பட்டதாகக் கூறப்படும் தகவல் தவறானது என அரசு தரப்பில் விளக்கப்பட்டுள்ளது.
தந்தையர் மகப்பேறு விடுப்பு குறித்த அறிவிப்பின் பின்னணியில், பழைய அரசாணைகளைத் தவறாகப் புரிந்துகொண்டு பரப்பப்படும் தகவல்களை நம்ப வேண்டாம் என்றும், அரசின் அதிகாரப்பூர்வ விளக்கங்களை அடிப்படையாகக் கொண்டு தகவல்களைப் பகிர வேண்டும் என்பதே இந்த விளக்கத்தின் முக்கிய நோக்கமாகும்.

