காவிரியில் தமிழ்நாட்டுக்கான நீரைத் தராமல் கர்நாடக அரசு வஞ்சித்து வருவதாகவும், ஒன்றிய அரசு அதற்குத் துணைபோவதாகவும் மணியரசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழகத்துக்கு உரிய காவிரி நீரைக் கர்நாடக அரசு தர மறுப்பதால் டெல்டா மாவட்டங்களில் இலட்சக்கணக்கான ஏக்கரில் சம்பா பயிர்கள் காய்ந்து கருகி வருகின்றன. இந்நிலையில் காவிரி நீரைத் தர மறுக்கும் கர்நாடக அரசையும், அதற்குத் துணைபோகும் ஒன்றிய அரசையும் கண்டித்துத் தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் விவசாயிகளின் பேரணி நடைபெற்றது. இதில் 1500க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டு கர்நாடக அரசையும், மத்திய அரசையும் கண்டித்து முழக்கமிட்டனர்.
இது தொடர்பாகச் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன், காவிரி உரிமையை மீட்டெடுக்க அனைத்துக் கட்சிகளும், விவசாயிகள் சங்கமும், வணிகர் சங்கங்களும் இணைந்து மாநிலம் தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடத்த வேண்டும் என்றார்.

