பீகாரில் மாவட்ட ஆட்சியரைக் கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனைக் காலம் முடியுமுன் குற்றவாளி ஆனந்த் மோகன், மாநில அரசால் விடுவிக்கப்பட்டதை உச்ச நீதிமன்றம் ரத்துச் செய்துள்ளது. ஒரு மாதத்துக்குள் சரணடைய உத்தரவிட்டுள்ளது.
பீகாரின் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் 1994ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியராக இருந்த கிருஷ்ணையா வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது ஆனந்த் மோகன் தலைமையிலான ரவுடிகள் அவரை அடித்துக்கொன்றனர். இந்த வழக்கில் முதலில் ஆனந்த் மோகனுக்கு மரணத் தண்டனை விதிக்கப்பட்டது. மேல்முறையீட்டில் பாட்னா உயர் நீதிமன்றம் இதை ஆயுள் தண்டனையாகக் குறைத்துவிட்டது.
அரசு ஊழியர்களைக் கொன்ற வழக்கில் தண்டனை பெற்றவர்களைக் குறைந்தது 20 ஆண்டுகளுக்கு முன் விடுவிக்க முடியாது எனச் சிறை விதி இருந்தது. ஆனால், கைதிகளை முன்கூட்டி விடுவிக்கும் விதிகளில் நிதிஷ்குமார் அரசு திருத்தம் செய்தது. அதன்படி 2023ஆம் ஆண்டில் ஆனந்த் சிங்கைச் சிறையில் இருந்து விடுதலை செய்தனர்.
இதை எதிர்த்துக் கிருஷ்ணையாவின் மனைவி உமா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் தீபங்கர் தத்தா, சீல் நாகு ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது ஆனந்த் மோகனை முன்கூட்டி விடுவித்த பீகார் அரசின் முடிவை ரத்துச் செய்தனர். ஆனந்த் மோகன் ஒரு மாதத்துக்குள் சரணடைய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.


