
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கொயிலாண்டி பகுதியில் நேற்று ஒரு கோவிலில் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவுக்காகக் கோகுல் மற்றும் பீதாம்பரம் என்ற வளர்ப்பு யானைகள் நெற்றிப்பட்டம் கட்டியவாறு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டன.
சுவாமி வீதி உலா முடிந்த பிறகு பட்டாசுகள் வெடிக்கத் தொடங்கின. அப்போது, வளர்ப்பு யானைகள் கோகுல் மற்றும் பீதாம்பரம் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.
இதைக் கண்ட பக்தர்கள் அங்குமிங்கும் அலறியடித்து ஓடினர். யானைகளைக் கட்டுப்படுத்த பாகன்கள் முயற்சித்தனர். யானைகளுக்கிடையிலான மோதலால் கோவில் அலுவலகத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
இந்தச் சம்பவத்தில், யானைகளுக்கிடையில் சிக்கிய கெயிலாண்டி பகுதியைச் சேர்ந்த 65 வயதான லீலா, 70 வயதான அம்மு குட்டியம்மா மற்றும் ராஜன் ஆகிய 3 பேர் உடல் நசுங்கி பரிதாபமாகப் பலியாகினர். மேலும் 30-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
