
சென்னையில் இளம்பெண்ணுக்குக் குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்துப் போதை தலைக்கேறியதும் பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த 18 வயது இளம்பெண், தனது தோழியுடன் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ரயில்மூலம் சென்னை வந்தார். பிறகு சேப்பாக்கம் ப்ளூ கேட் எதிரில் உள்ள நடைபாதையில் தங்கி போக்குவரத்து சிக்னல்களில் பிச்சை எடுத்து வந்தார். இதற்கிடையே ப்ளூ கேட் அருகே மெரினாவில் குதிரையோட்டும் சவுந்தர் (24) என்பவர் இளம்பெண்ணை எப்படியாவது அடைய வேண்டும் என்பதால் அவரைப் பின்தொடர்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தனது தோழியுடன் தூங்கிக் கொண்டிருந்த இளம்பெண் திடீரென மாயமானார். இதனைச் சற்றும் எதிர்பாராத தோழி இளம்பெண்ணைக் காணவில்லை என்று கூறி அலறிக் கூச்சலிட்டுள்ளார். இதுதொடர்பாகத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதனையடுத்து அப்பகுதியில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, சுவாமி சிவானந்தா சாலையில் உள்ள அண்ணா அரங்கம் அருகே உள்ள புதரில் மாயமான இளம்பெண்ணைச் சவுந்தர் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. அவரிடம் விசாரணை நடத்தியபோது தனது தோழியுடன் தூங்கிக் கொண்டிருந்த இளம்பெண்ணுக்குக் குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து, போதை தலைக்கு ஏறியதும், இளம்பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சவுந்தரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

