உலக தற்கொலை தடுப்பு தினம்
வாழ நினைத்தால் வாழலாம்…
வழியா இல்லை பூமியிலே… ஆழக் கடலும் சோலையாகும் ஆசையிருந்தால் நீந்தி வா….
இந்த வரிகள் வாழத் துடிப்பவர்களுக்கு மட்டுமல்ல, வாழ்க்கையில் விரக்தி அடைந்து தவறான முடிவைத் தேடுபவர்களுக்கும் தான்…

உலகத்தில் விலை மதிப்பற்றது உயிர், போனால் திரும்பக் கிடைக்காது. இறத்தல் என்பதற்கு இல்லை என்று பொருள். இறப்பு எல்லா உயிர்களுக்கும் நிகழும். மரம், செடி, கொடி, புழு, பூச்சி, பாம்பு, பல்லி, பறவைகள், விலங்குகள் எதுவும் தன்னைத் தானே மாய்த்துக் கொள்வதில்லை.
இயற்கையின் சகல வசதிகளையும் அனுபவித்து செயற்கையாகவும் வசதிகளையும் ஏற்படுத்திக் கொண்டு வாழும் ஆறறிவு படைத்த மனிதன் தான் கோழைத்தனமாக உயிரை மாய்த்துக் கொள்கிறான்.
“வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல்தோறும் வேதனை இருக்கும்…வந்த துன்பம் எது வந்தாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை…நமக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு”
சோதனை என்று சோர்ந்து போகும் ஒவ்வொருவருக்காகவே எழுதப்பட்டவை இந்த வரிகள்.
ஏமாற்றம், விரக்தி, துக்கம், துயரம், நஷ்டம், முக்கியமாகக் காதல் தோல்வி. இப்படி பலப்பல காரணங்களால் தற்கொலை செய்து கொள்கின்றனர். காட்டிலே வாழ்ந்த கற்கால மனிதன் கூடக் கல் போன்ற நெஞ்சுரத்தோடு வாழ்ந்தான். ஆனால் தற்போது கம்ப்யூட்டர் காலத்தில் வாழ்ந்து வரும் சந்ததியினர் சிறிய பிரச்னைகளைக் கூட எதிர்த்துப் போராட முடியாமல் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.

உலகம் முழுவதும் தற்கொலை நடப்பதை தடுக்கவும், அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், 2003-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டெம்பர் 10-ம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினம், உலக சுகாதார அமைப்பு, மற்றும் மன நலத்திற்கான கூட்டமைப்பு ஆகிய அமைப்புகள் முன்னின்று நடத்துகின்றன.
சர்வதேச அளவில் ஒரு வருடத்திற்கு சுமார் 8 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்வதாக, உலக சுகாதார அமைப்பு எடுத்த கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. உலக அளவில் ஒவ்வொரு 40 விநாடிக்கும் ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் அதிலும் தமிழ் நாட்டில் தான் அதிகம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். குறிப்பாக இளம் வயதினர் மன வலிமையின்றி காதல் தோல்வி, தேர்வில் தோல்வி, வீட்டில் திட்டினார்கள் போன்ற சிறுசிறு காரணங்களுக்காகத் தற்கொலை செய்து கொள்வதைக் காண முடிகிறது.

தமிழகத்தில் சினேகா என்ற அமைப்பு சிறப்பாகச் சேவை செய்து வருகின்றது. இந்த அமைப்பின் மூலம் மன நல ஆராய்ச்சியாளர், டாக்டர் லட்சுமி விஜயகுமார் மன அழுத்ததில் உள்ளவர்களுக்காகப் பிரத்யேகமாக ஆலோசனைகளை நேரிடையாகவும், தொலைபேசி வாயிலாகவும் வழங்கி வருகிறார்.
அவர் இதுகுறித்து கூறும்போது சர்வதேச கணக்கெடுப்பின் படி உலகிலேயே இந்தியாவில் தான் தற்கொலைகள் அதிகம் நடக்கிறது. அதாவது ஒரு வருடத்திற்கு 2 லட்ச்ம் பேர் இறப்பதாகவும் தெரிவித்தார். 1986-ல் தொடங்கப்பட்ட சினேகா அமைப்பு லட்சத்திற்கும் அதிகமானோரை மீட்டுள்ளதாகவும் தினமும் 100-க்கும் மேற்பட்டோர் நேரில் வந்து ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற்று செல்வதாகவும் கூறினார். ஒவ்வொருவர் மனதிலும் தன்னம்பிக்கை வரும் வார்த்தைகளை விதைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

குடும்பத்தில் உள்ளவர்கள், நண்பர்கள், உறவினர்கள் யாரிடமாவது ஒருவரிடம் நம் மனக் கஷ்டத்தைப் பகிர வேண்டும். முக்கியமாகத் தனிமையில் இருப்பதை தவிர்க்க வேண்டும். இதுகுறித்து விழிப்புணர்வு மற்றும் முக்கியத்துவத்தையும் உயிரின் மகத்துவத்தையும் குழந்தை முதல் கொண்டே சொல்லி வளர்ப்பது அவசியம் போன்ற பல ஆலோசனைகளை வழங்கினார்.
“என்ன வேணா நடக்கட்டும் நான் சந்தோசமா இருப்பேன்…
உசிர் இருக்கு வேறென்ன வேணும் உல்லாசமா இருப்பேன்”
தங்கமான வரிகள்…
உயிர் ஒன்று இருந்தால் போதும், உலகையே விலை பேசலாம் …
நண்பர்களே அனைவரும் வாழ விழையுங்கள்… தற்கொலையைத் தடுப்போம் தரணியை ஆள்வோம்.

