
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கோட்டக்குடியைச் சேர்ந்த பிரபாகரன் (30), தனது மனைவி கார்த்திகா (24)வை கொலை செய்து உடலை எரித்ததுடன், சாம்பலை அருகிலிருந்த கிணற்றில் கரைத்ததாக கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபாகரன் மற்றும் கார்த்திகா காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில். இவர்களுக்கு 3 வயதான தேகாஶ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது. பிரபாகரன் மீது ஏற்கனவே கொலை, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.
கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறால் கார்த்திகா தனது தாய் வீட்டில் வசித்து வந்ததாகவும், சில நாட்களுக்கு முன்பு பிரபாகரன் சமாதானம் செய்து மீண்டும் அழைத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 3-ஆம் தேதி இரவு சொந்த வயலுக்கு அழைத்துச் சென்று கார்த்திகாவை கொலை செய்து, உடலை எரித்து, சாம்பலை அருகிலிருந்த கிணற்றில் கரைத்ததாக இன்று காலை கொட்டக்குடி கிராம நிர்வாக அலுவலர் செல்லத்திடம் பிரபாகரன் தெரிவித்துத் சரணடைந்தார்.
இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் அளித்த தகவலின் பேரில், மேலூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சிவகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு நடத்தி பிரபாகரனை கைது செய்தனர். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தேவநாதன் நேரில் ஆய்வு மேற்கொண்டு, தடயங்களை சேகரித்து விசாரணையை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
முதற்கட்ட விசாரணையில், மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது, குழந்தையைச் சுற்றிய குடும்பப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. எனினும், கொலைக்கான உண்மையான காரணம் பிரபாகரனிடம் தொடர்ந்து நடத்தப்படும் விசாரணைக்குப் பிறகே உறுதியாக தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பாக பிரபாகரனின் நண்பர்கள் கரண், சாந்தகுமார் ஆகியோரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. கணவனே மனைவியை கொலை செய்து உடலை எரித்து, சாம்பலை கிணற்றில் கரைத்ததாக கூறப்படும் இந்தச் சம்பவம் மேலூர் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது..


