
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் டிரெய்லர் வரும் 17ம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி வெளியான திரைப்படம் ‘புஷ்பா’. இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியானது. கிட்டத்தட்ட ரூ. 350 கோடிமேல் இந்தத் திரைப்படம் வசூலித்ததாகத் தகவல்கள் வெளியாகின. இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.
இத்திரைப்படத்திற்கு ‘புஷ்பா 2 தி ரூல்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிக்கும் இந்தத் திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ‘புஷ்பா 2 தி ரூல்’ திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 5ம் தேதி உலகளவில் வெளியாகவுள்ளது. ‘புஷ்பா 2 தி ரூல்’ திரைப்படத்தின் டீசரும் அதனைத் தொடர்ந்து திரைப்படத்தின் பாடல்களின் லிரிக் வீடியோவும் வெளியாகி வைரலானது.
‘புஷ்பா’ படத்தில் ‘ஊ சொல்றியா’ என்ற பாடலுக்குச் சமந்தா நடனமாடி இருந்தநிலையில், புஷ்பா -2 படத்தில் நடனமாட நடிகை ஸ்ரீலீலா ஒப்பந்தமாகி இருக்கிறார். அவர் நடமாடுன் அந்தப் பாடலுக்கு ‘கிஸ்சிக்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் புஷ்பா 2 திரைப்படத்தில் டிரெய்லர் வெளியீட்டு தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இதன் டிரெய்லர் வரும் 17ம் தேதி மாலை 6.03 மணிக்கு வெளியாக உள்ளது. இதன் வெளியீட்டு விழா பாட்னாவில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




