
தென்மேற்குப் பருவமழை கேரளத்தில் இன்று தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வுத் துறை அறிவித்துள்ளது. இந்தியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதி மாநிலங்கள், வடமாநிலங்கள், வடகிழக்கு மாநிலங்கள் என நாட்டின் பெரும்பகுதி தென்மேற்குப் பருவமழையால் பெரிதும் பயனடைகின்றன.
இந்தியாவில் வேளாண்மைக்கும் உணவுதானிய விளைச்சலுக்கும் இது மிக முதன்மையானது. தென்மேற்குப் பருவமழை அந்தமான் தீவில் மே 15 வாக்கிலும், கேரளத்தின் தென்பகுதியில் ஜூன் முதல் வாரத்திலும் தொடங்குவது வழக்கம்.
இந்த ஆண்டில் தென்பட்ட வானிலை அறிகுறிகளின்படி கேரளத்தில் மே இறுதிவாரத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வுத்துறை கணித்திருந்தது.
இந்நிலையில் கேரளத்தின் திருவனந்தபுரத்தில் நேற்றே கனமழை பெய்துள்ளது. நகரின் பல பகுதிகளில் கனமழை காரணமாக மரங்கள் முறிந்தும் சாய்ந்தும் விழுந்துள்ளன. அவற்றை அகற்றும் பணியில் பேரிடர் மீட்புப் படையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இன்றும் கேரளத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
மாநிலத்தின் வடக்கில் உள்ள காசர்கோடு, கண்ணூர் மாவட்டங்களில் அதிகனமழை பெய்யக்கூடும் எனக் கூறிச் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு, வயநாடு, மலப்புறம், திருச்சூர், பாலக்காடு, எர்ணாக்குளம், இடுக்கி, கோட்டயம், பத்தனம்திட்டை ஆகியவற்றுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், கொல்லம் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை வழக்கமான நாளான ஜூன் முதல் நாளுக்கு மாறாக எட்டு நாட்களுக்கு முன் இன்று தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வுத் துறை அறிவித்துள்ளது.




