வயநாடு; நிலச்சரிவால் பேரழிவு அபாயம் இருப்பதாக சூழலியல் மற்றும் வனவிலங்கு உயிரியலுக்கான மையம் முன்பே எச்சரித்தும் வயநாடு கலெக்டர் அலுவலக அதிகாரிகள் கோட்டைவிட்ட விவரம் தற்போது தெரியவந்துள்ளது.
வாழ்வாதாரம்
ஒரு நாளில் கேரள மாநிலம், வயநாட்டில் எல்லாமே மாறிப்போனது. அங்கு ஏற்பட்ட பேரழிவு நிலச்சரிவு ஏராளமான உயிர்களை பறித்துக் கொண்டு போக, உயிர்பிழைத்த பலரும் வாழ்வதாரம் இன்றி தவித்து வருகின்றனர். மறுகுடியமர்த்தும் பணிகள் நடந்து வந்தாலும் பேரழிவு பகுதிகள் எதிர்காலத்தில் மனிதன் வாழத் தகுதியற்ற இடமாக மாறிவிடுமோ என்று மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
முன்பே எச்சரிக்கை
இந் நிலையில் வயநாட்டில் நிலச்சரிவால் பேரழிவு ஏற்படும் என்று சூழலியல் மற்றும் வனவிலங்கு உயிரியலுக்கான மையம் முன்பே எச்சரித்த விவரம் தற்போது தெரிய வந்துள்ளது. இம்மையம் வெளியிட்ட இந்த அலர்ட்டை வயநாடு கலெக்டர் அலுவலக அதிகாரிகள் கோட்டைவிட்டதும் தெரிய வந்துள்ளது.
சூழலியல்
கல்பெட்டாவை மையமாக கொண்டு இயங்கி வரும் சூழலியல் மற்றும் வனவிலங்ககு உயிரியலுக்கான மையம் தான் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. தாமஸ் என்பவர் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் 6 கேள்விகளை வயநாட்டு கலெக்டருக்கு அனுப்பி இருந்தார். அதன் மூலமே இந்த தகவல்கள் எல்லாம் வெளி வந்திருக்கின்றன.
16 மணி நேரம்
பேரழிவு நிகழும் 16 மணி நேரம் முன்பே முண்டக்கை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு ஆபத்து நேரலாம் என்பதை சுட்டிக்காட்டி மாவட்ட நிர்வாகத்துக்கு எச்சரிக்கை செய்துள்ளது. ஆனால் இதை அலட்சியப்படுத்திவிட்டு, ஆகஸ்ட் 29ம் தேதி இரவு 10.35 மணிக்கு தான் மாவட்ட நிர்வாகம் அலர்ட் விடுத்துள்ளது.
அலர்ட்
கிட்டத்தட்ட சூழலியல் மற்றும் வனவிலங்ககு உயிரியலுக்கான மையம் விடுத்த எச்சரிக்கைக்கு பின்னர் 14 மணி நேரம் கழித்துத்தான் அலர்ட் அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டு உள்ளது. இந்த அலர்ட் அறிவிப்பு போதிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதோடு நிலைமையின் தீவிரத்தையும் யாருக்கும் உணர்த்தவில்லை.
அக்கறை
பேரழிவு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் வயநாடு மாவட்ட நிர்வாகம் பெரிய அளவில் அக்கறை காட்டவில்லை என்ற குற்றச்சாட்டுகள் நிலச்சரிவு ஏற்பட்ட தருணத்தில் பெரிதாக பேசப்பட்டது. தற்போது அது உண்மைதானோ என்று யோசிக்க வைக்க வைக்கும் அளவில் புதுப்புது தகவல்கள் வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.