
வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 344-ஆக உயர்ந்த சோகம்.. மேப்பாடி, சூரல்மலை ஆகிய இடங்களில் நான்காவது நாளாகத் தீவிர மீட்புப்பணி நடந்து வருகிறது.
344பேர் பலி
வயநாடு நிலச்சரிவில் இதுவரை 344பேர் உயிரிழந்துள்ளதாகக் கேரள அரசு அறிவித்துள்ளது. அதேவேளை, 200க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சுமார் 300 பேர் மாயம்
வயநாடு நிலச்சரிவில் சுமார் 300 பேர் மாயமாகியுள்ளனர். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும், நிலச்சரிவில் சிக்கி மாயமானவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
1000க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்பு
வயநாடு நிலச்சரிவில் சிக்கிய 1000க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகக் கேரள அரசு தெரிவித்துள்ளது.
4வது நாளாகத் தொடரும் மீட்பு பணி
வயநாட்டில் கடந்த 30ம் தேதி நிலச்சரிவு , காட்டாற்று வெள்ளம் ஏற்பட்ட நிலையில் தொடர்ந்து 4வது நாளாக இன்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
4 நாட்களுக்குபின் ஒரேகுடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிருடன் மீட்பு
வயநாடு நிலச்சரிவில் சிக்கிய ஒரேகுடும்பத்தை சேர்ந்த 4 பேர் 4 நாட்களுக்குபின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். சூரல்மலையிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமம் படவெட்டிகன்னு.
இந்தக் கிராமமும் நிலச்சரிவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஜானி தனது குடும்பத்துடன் நிலச்சரிவில் சிக்கிக்கொண்டார். நிலச்சரிவு ஏற்பட்டபோது அவர் குடும்பத்துடன் மலை உச்சிக்குச் சென்று தப்பியிருக்கலாமெனத் தகவல் வெளியான நிலையில் ஜானி தனது குடும்பத்துடன் வீட்டிலேயே இருந்துள்ளார். தற்போது 4 நாட்கள் கழித்து ஜானி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் 4 பேரும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
ஜானி குடும்பத்தில் 2 ஆண்கள், பெண், சிறுமி மொத்தம் 4 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதில் சிறுமிக்குக் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. மீட்கப்பட்ட அனைவரும் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, காயமடைந்த சிறுமிக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீட்கப்பட்ட 4 பேரும் கடந்த 4 நாட்களாகத் தங்கள் வீட்டிலேயே இருந்துள்ளனர். நிலச்சரிவில் ஜெனரேட்டர் பாதிக்கப்படாததால் 4 நாட்களும் ஜானி வீட்டில் மின் இணைப்பு இருந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நிலச்சரிவில் உயிரிழந்த 199 பேரின் உடல்களுக்கு உடற்கூராய்வு நிறைவு – வீணா ஜார்ஜ்
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 199 பேரின் உடல்களுக்கு உடற்கூராய்வு நிறைவடைந்துள்ளதாகக் கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகப் பேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், நிலச்சரிவிலிருந்து மீட்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கச் சிறப்பு ஐ.சி.யூ.க்கள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் 130 உடல் பாகங்களின் டி.என்.ஏ. மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், சடலங்களுக்கு இறுதிச் சடங்கு செய்யத் தேசிய, சர்வதேச வழிகாட்டு நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதாகவும் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.


