
புதுடில்லி: ஒவ்வொரு நிறுவனமும் எதைச் செய்தாலும் அது வளர்ந்த இந்தியாவுக்காக இருக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டிற்கான தேசிய திட்டங்கள், முன்னுரிமைகள் மற்றும் இலக்குகளை உருவாக்குவதில் இளைய தலைமுறையினரை தீவிரமாக ஈடுபடுத்துவதே மோடியின் தொலைநோக்குப் பார்வை. இதனடிப்படையில் ‘விக்சித் பாரத் @2047: இளைஞர்களின் குரல்’ என்ற திட்டத்தை இன்று (டிச.,11) வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: முழு உலகமும் இந்திய இளைஞர்கள் மீது பார்வை வைத்துள்ளது. வளர்ந்த இந்தியாவின் தீர்மானங்கள் தொடர்பான மிக முக்கியமான நாள் இன்று.
வளர்ந்த இந்தியாவைக் கட்டியெழுப்புவது தொடர்பான இந்த பயிலரங்கை ஏற்பாடு செய்த அனைத்து கவர்னர்களையும் நான் வாழ்த்த விரும்புகிறேன். ஒவ்வொரு நிறுவனமும் எதைச் செய்தாலும் அது வளர்ந்த இந்தியாவுக்காக இருக்க வேண்டும்.
கல்வி நிறுவனங்களின் பங்கு தனிநபர்களை மேம்படுத்த வேண்டும். தனிமனித வளர்ச்சியின் மூலம் மட்டுமே தேசத்தை கட்டியெழுப்ப முடியும். தேச நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் இளைய தலைமுறையை உருவாக்க வேண்டும். துணைவேந்தர்கள், கல்வி நிறுவனங்களின் தலைவர்கள் மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


