கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜயிடம் தில்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது.
கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, இணைச் செயலாளர் நிர்மல்குமார், கரூர் மாவட்டச் செயலாளர் உள்ளிட்டோர் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் விளக்கம் அளித்தனர்.
இதனையடுத்து, விஜய்க்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி, 12 ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டது. இதன்படி விஜய் இன்று காலை தனி விமானத்தில் சென்னையில் இருந்து தில்லிக்குப் புறப்பட்டார். தில்லியில் காலை 11 மணிக்கு சி.பி.ஐ. அலுவலகத்துக்கு செல்கிறார்.
சி.பி.ஐ. விசாரணையில் விஜய்யிடம், கரூர் சம்பவம் தொடர்பாக பல நெருக்கடியான கேள்விகள் கேட்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதைத்தொடர்ந்து, விஜய் தில்லி வருகையையொட்டி த.வெ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் தில்லிக்கு புறப்பட்டனர். இதனால், தில்லி சி.பி.ஐ. அலுவலகம் முன்பு பெரும் கூட்டம் திரளும் என எதிர்பார்க்கப்படுகிறது.


