
விஸ்வ இந்து பரிசத் அமைப்பின் தலைவர் வேதாந்தம் சென்னையில் 94ஆவது வயதில் காலமானார். விஸ்வ இந்து பரிசத் அமைப்பின் முன்னோடிகளில் ஒருவர் வேதாந்தம். இவர் தமிழ்நாட்டில் விஸ்வ இந்து பரிசத் அமைப்பை வளர்ப்பதில் பெரும்பங்காற்றியவர்.
சென்னை தியாகராய நகரில் உள்ள தமது இல்லம் மற்றும் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சிக்கான தமிழ்முற்றம் என்னும் அமைப்பை நிறுவித் தமிழ் வளர்ச்சி ஆன்மீகம் தொடர்பான நிகழ்ச்சியை வாரந்தோறும் நடத்தி வந்தார்.
கிராமக் கோவில் பூசாரிகள் பேரவை, ஓராசிரியர் பள்ளித் திட்டம், சுவாமி விவேகானந்தர் ஊரக மேம்பாட்டு இயக்கம் ஆகியவற்றில் இணைந்து பணியாற்றியவர். 1933ஆம் ஆண்டு பிறந்த வேதாந்தம் கடந்த பிப்ரவரி மாதம் 94ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார். மூப்புக் காரணமாக இன்று அவர் தனது 94ஆவது வயதில் சென்னையில் காலமானார்.
வேதாந்தம் உடல் சென்னை தியாகராய நகரில் உள்ள அவர் இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.பாஜக, ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி, விஸ்வ இந்து பரிசத் ஆகியவற்றைச் சேர்ந்த தலைவர்கள் அவர் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


