ஒடிசா பாஜக எம்பிக்களுக்கு நவீன் பட்நாயக் கடிதம்.!

Advertisements

சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டத் திருத்த முன்வரைவைத் திரும்பப் பெற வலியுறுத்தக் கோரி ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பிஜு ஜனதா தளத் தலைவர் நவீன் பட்நாயக் கடிதம் எழுதியுள்ளார்.

ஒடிசாவைச் சேர்ந்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நவீன் பட்நாயக் எழுதியுள்ள கடிதத்தில், ஆகஸ்டு 13ஆம் நாள் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாடு ஒழுங்குமுறைச் சட்டத் திருத்த முன்வரைவு பத்து நிமிடத்துக்கும் குறைவான விவாதத்துடன் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தச் சட்ட முன்வரைவு ஒடிசாவின் நலன்களைப் பெரிதும் பாதிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் 44 விழுக்காடு கனிம வளங்களை ஒடிசா கொண்டுள்ளதாகவும், இதன்மூலம் இந்தியாவின் உருக்கு, மின்னாற்றல் துறைகளுக்குப் பெரும்பங்களித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம், கனிமங்களும், கனிம நிலங்களும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளப்படுவதால் ஒடிசாவுக்கு ஆண்டுக்குப் பன்னிரண்டாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். கனிமத் தொழிலால் ஏற்படும் மாசுபாடு, இடப்பெயர்வு, சுற்றுச்சூழல் சீர்குலைவு ஆகியவற்றைத் தாங்கும் மக்களுக்கு அதன் பயன்கள் கிடைக்காதது ஒடிசா மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதனால் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டத்திருத்தத்தைத் திரும்பப் பெற வலியுறுத்த வேண்டும் என்று நவீன் பட்நாயக் கோரியுள்ளார்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *