Vande Bharat Express Train: தமிழ்நாட்டுக்கு மேலும் வந்தே பாரத் ரயில்!

சென்னை – மைசூரு இடையே கூடுதலாக வந்தே பாரத் ரயில் இயக்கப்படவுள்ளதாகத் தென்னக ரயில்வே அறிவித்திருந்த நிலையில், இன்று இந்த ரயில் சேவையைப் பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலமாகத் தொடங்கி வைத்தார்.

சென்னை: இந்தியாவில் முக்கிய நகரங்களுக்கு இடையே விரைவாகச் செல்வதற்காக வந்தே பாரத் ரயில்கள் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் தென்னக ரயில்வே சார்பாக, சென்னை சென்ட்ரலிலிருந்து கோயம்புத்தூர், மைசூரு, விஜயவாடா ஆகிய நகரங்களுக்கும், சென்னை எழும்பூரிலிருந்து நெல்லை, திருவனந்தபுரம், காசர்கோடு ஆகிய பகுதிகளுக்கும் வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது.

வந்தே ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து பயணிகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை – மைசூரு இடையே கூடுதலாக ஒரு வந்தே பாரத் ரயில் மார்ச் 12 ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ளதாகவும், இச்சேவை ஏப்ரல் 4ஆம் தேதிவரை சென்னை – பெங்களூரு இடையே மட்டும் இயக்கப்படும் என்றும், ஏப்ரல் 5ஆம் தேதிக்கு மேல் மைசூரு வரை செல்லும் எனவும் தென்னக ரயில்வே தெரிவித்திருந்தது.

அந்த வகையில், சென்னை – மைசூர் இடையேயான வந்தே பாரத் ரயிலைக் காணொலி வாயிலாகப் பிரதமர் மோடி கொடியசைத்துத் துவக்கி வைத்தார். மேலும் சென்னை சென்ட்ரல் நடந்த சென்னை – மைசூரு இடையேயான 2வது வந்தே பாரத் ரயில் தொடக்க விழாவில், ஆளுநா் ஆா்.என்.ரவி, மத்திய இணையமைச்சா் எல்.முருகன் ஆகியோா் கலந்து கொண்டனர். நாடு முழுவதும் சுமார் ரூ.85 ஆயிரம் கோடிக்கு அதிகமாகத் திட்டங்களைப் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வந்தே பாரத் ரயிலானது வாரந்தோறும் புதன்கிழமை தவிர்த்து, தினமும் காலை 6 மணிக்கு மைசூரிலிருந்து புறப்பட்டு (வ.எண்: 20663) பிற்பகல் 12.25 மணிக்குச் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடையும். மறுமார்க்கமாகச் சென்னை சென்ட்ரலிலிருந்து மாலை 5 மணிக்குப் புறப்படும் இந்த ரயில் (வ.எண்: 20664) காட்பாடி, ஜோலாா்பேட்டை, கிருஷ்ணராஜபுரம், மாண்டியா வழியாக இரவு 11.20 மணிக்கு மைசூரு சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *