“திமுக ஆட்சியில் ஊழல் உச்சம் தொட்டது!” – வைகோ அதிரடி!

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், தவெக உடனான கூட்டணி மற்றும் திமுக ஆட்சிக்காலம் குறித்துத் தெரிவித்த கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த கால திமுக ஆட்சியைத் கடுமையாகச் சாடிய வைகோ, “திமுக ஆட்சியில் மக்கள் வெறுப்பின் உச்சத்தில் இருந்தனர். கமிஷன், கரெக்‌ஷன், கட்டிங் என ஊழல் தலைவிரித்தாடியது. அந்த நேரத்தில் நான் திமுக கூட்டணியில் இருந்தேன். கூட்டணியில் இருந்து கொண்டே விமர்சிப்பது அயோக்கியத்தனம் என்பதால் அப்போது மௌனம் காத்தேன்” என்று வெளிப்படையாகப் பேசினார்.

தவெக உடனான கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த வைகோ, “தவெக கூட்டணியில் மதிமுக உறுதியாக உள்ளது; கூட்டணியின் ஓர் அங்கமாகத் தொடர்ந்து பயணிக்கும். வரவிருக்கும் 5 ஆண்டுகள் மட்டுமல்ல, அதற்குப் பிறகும் தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் தான் தொடர்வார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு உள்ளது” எனத் தெரிவித்தார்.

பேட்டியின் போது, “திமுக கூட்டணியில் இருந்தபோது ஏன் விமர்சிக்கவில்லை?” எனச் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இந்தக் கேள்வி வைகோவை ஆவேசப்படுத்தியது. செய்தியாளருக்கும் வைகோவுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதைக் கண்டு மதிமுக நிர்வாகிகளும் வாக்குவாதத்தில் குதிக்க, அப்பகுதி சிறிது நேரம் பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *