
பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றபோது பெண்ணைக் கொதிக்கும் எண்ணெய் கொப்பரையில் தூக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் புடான் மாவட்டம் பினாலி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆயில் மில் நடத்தி வருபவர் பிரமோத். இவரது ஆலையில் முசாபர்நகரை சேர்ந்த 18 வயதுடைய தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண் வேலை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று வழக்கம்போல் ஆலையில் அந்தப் பெண் வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது ஆலை உரிமையாளர் பிரமோத் மற்றும் அவரது நண்பர்களான ராஜு, சந்தீப் ஆகியோர் அங்கு வந்தனர்.
பின்னர் அவர்கள் அந்தப் பெண்ணிடம் சில்மிஷம் செய்தனர். பின்னர் அவரைப் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். அப்போது அந்தப் பெண் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களிடமிருந்து தன்னை தற்காத்துக் கொள்ள போராடினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும், அந்தப் பெண்ணைக் கொதிக்கும் எண்ணெய் கொப்பரையில் தூக்கி வீசினர். இதில் உடல் வெந்த நிலையில் அவர் அலறித்துடித்தார்.
இதையடுத்து பிரமோத் உள்பட 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதற்கிடையே பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவம்குறித்து பினாலி போலீசில் பெண்ணின் தம்பி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



