
நியூயார்க்: ‘எல்லை தாண்டிய பங்கரவாத தாக்குதலில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தால், கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்’ எனப் பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், ‘இந்தியா தனது ராணுவத் திறனைப் பெருமளவில் விரிவுபடுத்தி வருகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைக் கைப்பற்றுவதற்காக நடவடிக்கைகளைத் துவங்கி விட்டது.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை இந்தியா திரும்பப் பெற வேண்டும்’ எனக் குறிப்பிட்டார். இதற்கு, பதிலளிப்பதற்கான உரிமையைப் பயன்படுத்தி ஐ.நா., சபையில் இந்திய தூதரக அதிகாரி பவிகா மங்களானந்தன் பேசியதாவது:
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் காஷ்மீர் பிரச்னைகள்குறித்த கருத்து கேலிக்கூத்தானது. பாகிஸ்தான் இந்திய பகுதிகளை ஆக்கிரமிக்க விரும்புகிறது. இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதியான ஜம்மு காஷ்மீரில் தேர்தலைச் சீர்குலைக்க பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறது.
உலகம் அறிந்தது போல், பாகிஸ்தான் நீண்ட காலமாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை அதன் அண்டை நாடுகளுக்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்தியுள்ளது. அத்தகைய நாடு வன்முறையைப் பற்றி எங்கும் பேசுவது பாசாங்குத்தனம்.
இந்தியாவிற்கு எதிரான எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்பதை பாகிஸ்தான் உணர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


