TTD | Tirupati | Cheetah
திருப்பதியில் லட்சுமி நரசிம்மர் சாமி கோவில் அருகே வைக்கப்பட்டு இருந்த கூண்டில் மீண்டும் ஒரு சிறுத்தை சிக்கியுள்ளது…
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் செல்லும் அலிபிரி நடைபாதையில் 6 வயது சிறுமியைச் சிறுத்தை கடித்து கொன்றது. இதனையடுத்து நடைபாதை பக்தர்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளன. வனத்துறையினர் சிறுமி பிணம் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் சிறுத்தையைப் பிடிக்க 3 இடங்களில் கூண்டு வைத்தனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு சுமார் 6 வயது சிறுத்தை ஒன்று கூண்டில் சிக்கியது. கூண்டில் சிக்கிய சிறுத்தை ஆவேசத்துடன் தனது கால்களால் கூண்டை தாக்கியது. இதில் சிறுத்தைக்கு லேசான காயம் ஏற்பட்டதால் வன உயிரியல் பூங்காவில் வைத்துச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சிறுத்தை குழந்தையைக் கொன்றதா என்பதை உறுதி செய்ய மரபணு ஆய்வு செய்து வருகின்றனர். கூண்டில் சிறுத்தை சிக்கிய அன்றே லட்சுமி நரசிம்மர் சாமி கோவில், காளி கோபுரம் பகுதிகளில் மற்றொரு சிறுத்தை சுற்றி திரிந்தது. நடைபாதை அருகே சுற்றி திரிந்த சிறுத்தையைப் பிடிக்க மொகாலி மெட்டு, லட்சுமி நரசிம்மர் சாமி கோவில் மற்றும் 35-வது வளைவு ஆகிய இடங்களில் கூண்டு வைக்கப்பட்டது. லட்சுமி நரசிம்மர் சாமி கோவில் அருகே வைக்கப்பட்டு இருந்த கூண்டில் நேற்று இரவு மேலும் ஒரு சிறுத்தை சிக்கியது.
கூண்டில் சிக்கிய சிறுத்தையை வனத்துறையினர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். கடந்த 50 நாட்களில் நடைபாதையில் இதுவரை 3 சிறுத்தைகள் சிக்கி உள்ளன. நடைபாதை அருகே அடிக்கடி சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் பக்தர்களின் வருகை பாதியாகக் குறைந்து உள்ளது. இதற்கு முன்பு தினமும் நடைபாதையில் 10 முதல் 15 ஆயிரம் பக்தர்கள்வரை வந்தனர். நடைபாதையில் வரும் பக்தர்களின் எண்ணிக்கை தற்போது 6 ஆயிரமாகக் குறைந்து உள்ளது.

