மாஸ்கோ:
”அமெரிக்கா, பிரிட்டன் தயாரிப்பு ஏவுகணைகளை ரஷ்யா மீது ஏவும், உக்ரைனின் முடிவெடுக்கும் மையங்கள் குறிவைத்து தாக்கப்படும்,” என, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார்.
ரஷ்யாவின் மாஸ்கோ மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரங்கள்மீது, உக்ரைன் படைகள் மிகப்பெரிய, ‘ட்ரோன்’ தாக்குதல்களைச் சமீபத்தில் நடத்தின. இந்நிலையில், ஆஸ்தானா என்ற இடத்தில் நடந்த ராணுவம் தொடர்பான மாநாட்டில் அந்நாட்டு அதிபர் புடின் பேசியதாவது:
நேட்டோ நாடுகள் ஒட்டுமொத்தமாகத் தயாரிக்கும் ஏவுகணையின் எண்ணிக்கையைவிட, 10 மடங்கு அதிக அளவிலான ஏவுகணைகளை ரஷ்யா தயாரிக்கிறது. தேவை இல்லாமல் எங்களிடம் வாலாட்டினால் மோசமான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.
அமெரிக்கா, பிரிட்டன் தயாரிப்பு ஏவுகணைகளை உக்ரைன் எங்கள்மீது ஏவினால், ‘ஓரேஷ்னிக்’ ஏவுகணையைப் பயன்படுத்த வேண்டிய நிலைக்கு நாங்கள் தள்ளப்படுவோம். இதை, உலகின் வேறு எந்த நாட்டின் ஏவுகணையுடனும் ஒப்பிட முடியாது. இது போன்ற ஏவுகணையை மேற்கத்திய நாடுகள் தயாரிப்பது இப்போதைக்கு சாத்தியம் இல்லாதது.
எங்கள்மீது தாக்குதலைத் தொடர்ந்தால், உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள, போர் தொடர்பான முடிவுகளை எடுக்கும் மையங்களைக் குறிவைத்து ஓரேஷ்னிக் ஏவுகணைகளை ஏவுவோம்.
இந்த ஓரேஷ்னிக் ஏவுகணை, அணு ஆயுதத்துக்கு நிகரானதாகக் கூறப்படுகிறது. இதைத் தான், உக்ரைனின் நிப்ரோவில் சோதனை முறையில் ரஷ்யா சமீபத்தில் ஏவியதாகக் கூறப்படுகிறது. இது, 5,500 கி.மீ., வரை சென்று தாக்கும் திறன் உடையது.