
நடிகை த்ரிஷா, ஆடுகளம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது… பாதியிலேயே அந்தப் படத்திலிருந்து விலகிய நிலையில், அதற்கான காரணம் என்ன என்பது குறித்து இந்தத் தொகுப்பில் பார்ப்போம்.
நடிகர் தனுஷ் ஹீரோவாக அறிமுகமான முதல் படம் வெற்றி பெற்ற போதிலும், மிகவும் மோசமான விமர்சனங்களை எதிர்கொண்டவர். இவர் ஹீரோ மெட்டீரியல் இல்லையென, பலர் கூறிய போதும் மனம் தளராமல், தனக்கு எதிரான விமர்சனங்களை ஏணி படியாக மாற்றி இன்று உச்ச நடிகர் என்கிற இடத்தை அடைந்துள்ளார்.
தமிழில் மட்டுமின்றி, டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் வரை கலக்கி கொண்டிருக்கும் நடிகர் தனுஷுக்கு… முதல் தேசிய விருதைப் பெற்று தந்தது, கடந்த 2011-ம் ஆண்டு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் திரைக்கு வந்த ‘ஆடுகளம்’ திரைப்படம் தான்.
சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை, சிறந்த படத்தொகுப்பு மற்றும் சிறந்த படத்துக்கான ஜூரி விருது ஆகியவற்றை கைப்பற்றியது. இந்தப் படத்தில் ஆங்கிலோ இந்தியன் பெண்ணாக ஜரின் என்கிற கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடிகை டாப்ஸி நடித்திருப்பார்.
இந்தக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க ஒப்பந்தமானவர் த்ரிஷா தான். த்ரிஷாவை வைத்து… படப்பிடிப்பு ஆரம்பமாகி நடந்து கொண்டிருந்த நிலையில், பாதியிலேயே வேறொரு ஹீரோவின் படத்திற்காக இப்படத்திலிருந்து த்ரிஷா விலகும் சூழல் ஏற்பட்டது. ஒரே நேரத்தில் இரண்டு படங்களிலும் நடிப்பது சாத்தியம் இல்லை என்பதால், ஆடுகளம் படத்தை டீலில் விட்டு விட்டுச் சிம்பு படத்தில் நடித்தார்.
அதாவது ஆடுகளம் படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது தான்… சிம்புவுக்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வந்த ‘விண்ணை தாண்டி வருவாயா’ படத்தின் படப்பிடிப்பும் நடந்து வந்தது. கால்ஷீட் பிரச்சனையால் ஏதேனும் ஒரு படத்தில் தான் நடிக்க வேண்டும் என்கிற சூழல் ஏற்பட்டதால், கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வந்த விண்ணை தாண்டி வருவாயா படத்தைத் தேர்வு செய்தார். ஆடுகளம் படத்தில் த்ரிஷாவுக்கு குறைவான காட்சிகள் இருந்தது தான் இப்படத்திலிருந்து இவர் விலகக் காரணம் எனக் கூறப்பட்டது.
த்ரிஷா ஆடுகளம் படத்திலிருந்து விலகியது அவருக்கு மனதில் தற்போது வரை ஒரு நெருடலாக இருந்தாலும்… இவர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த விண்ணை தாண்டி வருவாயா படமும் தாறுமாறு ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

