Tragedy At Pongal Festival: இளவட்டக் கல் விழுந்து வாலிபர் பலி!

Advertisements

பொங்கல் விழாவில் இளவட்டக் கல் விழுந்து வாலிபர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காணும் பொங்கல் விழாவையொட்டி நேற்று இளவட்டக் கல்லைத் தூக்கும் போட்டி நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி; பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இவற்றில் மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இதன்படி கடந்த 15-ந்தேதி மதுரை அவனியாபுரத்திலும், நேற்று முன்தினம் பாலமேட்டிலும் நேற்று அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகுவிமரிசையாக நடைபெற்றன.

இந்தநிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சேதுநாடு கிராமத்தில் காணும் பொங்கல் விழாவையொட்டி நேற்று இளவட்டக் கல்லைத் தூக்கும் போட்டி நடைபெற்றது.

அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த பிரபு(வயது 29) என்பவர் இளவட்டக் கல்லைத் தூக்க முயன்றபோது எதிர்பாராத விதமாகத் தவறி கல்லுடன் கீழே விழுந்தார். இதில் அவரின் தலைப்பகுதியில் கல் விழுந்தது.

உடனே, அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, அவரைப் பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தார்.

பொங்கல் விழாவில் இளவட்டக் கல் விழுந்து வாலிபர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *