தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் சென்னையில் சந்தோஷ் நகர் பகுதி 1 திட்டப்பகுதியில் பழுதடைந்த பழைய குடியிருப்புகள் இடிக்கப்பட்டு, மறுகட்டுமான திட்டத்தின் கீழ் தூண் மற்றும் 14 தளங்களுடன் 57 கோடியே 34 லட்சம் ரூபாய் செலவில் 410 புதிய குடியிருப்புகள், சந்தோஷ் நகர் பகுதி 2 தூண் மற்றும் 14 தளங்களுடன் 20 கோடியே 98 லட்சம் ரூபாய் செலவில் 150 புதிய குடியிருப்புகள், மூலகொத்தளம் பகுதி 1 திட்டப்பகுதியில் தூண் மற்றும் 9 தளங்களுடன் 94 கோடியே 77 லட்சம் ரூபாய் செலவில் 648 புதிய குடியிருப்புகள், மூலகொத்தளம் பகுதி 2 தூண் மற்றும் 11 தளங்களுடன் 57 கோடியே 91 லட்சம் ரூபாய் செலவில் 396 புதிய குடியிருப்புகள்; செங்கல்பட்டு மாவட்டம், அன்னை அஞ்சுகம் நகர் திட்டப்பகுதியில் 192 அடுக்குமாடி குடியிருப்புகள், காயரம்பேடு திட்டப்பகுதியில் 64 அடுக்குமாடி குடியிருப்புகள், பெரும்பாக்கம் திட்டப்பகுதியில் தரை மற்றும் 7 தளங்களுடன் 480 புதிய குடியிருப்புகள். வேலூர் மாவட்டம், பத்தலபல்லி திட்டப்பகுதியில் 304 அடுக்குமாடி குடியிருப்புகள், தருமபுரி மாவட்டம், மோலையானூர் திட்டப்பகுதியில் 2 தளங்களுடன் 192 அடுக்குமாடி குடியிருப்புகள், தேனி மாவட்டம், வடவீரநாயக்கன்பட்டி தரைத்தள இரட்டை குடியிருப்புகள் 110 குடியிருப்புகள், கன்னியாகுமரி மாவட்டம், ஈசாந்தி மங்கலம் திட்டப்பகுதியில் 64 அடுக்குமாடி குடியிருப்புகள் என மொத்தம் 358 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள 3,010 குடியிருப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக திறந்து வைத்து, இக்குடியிருப்பிற்கான 902 பயனாளிகளுக்கு ஒதுக்கீடு ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 பயனாளிகளுக்கு ஒதுக்கீடு ஆணைகளையும் வழங்கினார். இப்புதிய குடியிருப்புகள், ஒவ்வொன்றும் தலா 400 சதுர அடி பரப்பளவு கொண்டது.
தி.மு.க. அரசு பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை 1583.41 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 15,505 அடுக்குமாடி குடியிருப்புகள் வீடற்ற ஏழை எளிய மக்களுக்காகவும், குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களுக்காகவும் திறந்து வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் வசிக்கும் உயர்கல்வி பயிலும் 100 மாணவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம், மொத்தம் 25 லட்சம் ரூபாய் வழங்கிடும் அடையாளமாக 5 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைக்கான காசோலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதேபோல் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் 276 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகக் கட்டடங்கள், வாரிய பிரிவு அலுவலகக் கட்டடம், சமுதாயக்கூடம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, 56 கோடியே 31 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்பட்ட மனை மேம்பாட்டுத் திட்டத்தை தொடங்கி வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் எம்.சி.ராஜா கல்லூரி மாணவர் விடுதி வளாகத்தில் தற்போது காலியாகவுள்ள இடத்தில் 10 தளங்களுடன் 44 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மாணவர் விடுதிக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.