Tirupati laddu: இன்று மாலை 6 மணிக்கு வீடுகளில் விளக்கு ஏற்றுங்கள் – திருப்பதி தேவஸ்தானம்!

லட்டு விவகராம் தொடர்பாக விரிவான ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி ஆந்திர அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

திருப்பதி:திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதமும், அதன் தனித்தன்மையான சுவையும் புகழ்பெற்றது. 300 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட இந்த லட்டு பிரசாதம், மிகவும் புனிதத்தன்மை வாய்ந்ததாகப் பக்தர்களால் போற்றப்படுகிறது.

இந்த நிலையில் திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படும் நெய்யின் தரம் குறைந்துள்ளதாக வந்த புகாரைத் தொடர்ந்து, அதனை மத்திய அரசின் ஆய்வு நிறுவனத்துக்கு அனுப்பி சோதனை செய்து பார்த்ததில், அந்த நெய்யில் மாட்டுக்கொழுப்பு, பன்றிக்கொழுப்பு இருப்பது தெரியவந்தது. இதனை ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பகிரங்கமாகத் தெரிவித்ததுடன், முந்தைய ஜெகன்மோகன் ரெட்டி அரசுமீது குற்றச்சாட்டையும் கூறினார்.

திருமலை திருப்பதி தேவஸ்தானமும் லட்டு பிரசாதத்தில் மாட்டுக்கொழுப்பு கலந்து இருப்பது உண்மைதான் என்று ஒப்புக்கொண்டது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், இந்தப் பிரச்சினை தொடர்பாக விரிவான ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி ஆந்திர அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து லட்டுவில் விலங்குகள் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதற்காகக் கோவிலைச் சுத்தப்படுத்தி, பரிகார பூஜை, சாந்தி யாகம் இன்று நடைபெற்றது. புனித நீரை லட்டு, பிரசாதம் தயாரிக்கும் மடப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் தெளிப்பதன் மூலம் தோஷங்கள் நிவர்த்தி அடையும் எனத் தேவஸ்தான செயல் அதிகாரி ஷியாமளா ராவ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், லட்டுவில் மாட்டுக் கொழுப்பு கலந்ததற்கு தோஷம் நீக்குவதற்காக, பக்தர்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் இன்று மாலை 6 மணிக்கு விளக்கு ஏற்ற வேண்டும் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. வீடுகளில் விளக்கேற்றும்போது “ஓம் நமோ நாராயணாய” என்று மந்திரம் உச்சரிக்க வேண்டும் எனத் தேவஸ்தானம் அறிவுறுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *